சட்டசபையில் பா.ஜ.க. இடம் பெற்றால் யாராலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது- திருமாவளவன் பேச்சு

சட்டசபையில் பா.ஜ.க. இடம் பெற்றால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்று களக்காட்டில் திருமாவளவன் எம்.பி. பேசியுள்ளார்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. களக்காட்டில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் தான் தமிழகத்தில் நடைபெறும் பா.ஜ.க.வின் மறைமுக ஆட்சிக்கு பதிலடி கொடுக்க முடியும். தமிழகத்தில் பா.ஜ.க.வின் ஆட்சி தான் நடந்து வருகிறது. பிரதமர் மோடி ஆட்சி நிர்வாகத்தை இயக்கி வருகிறார்.

ஜெயலலிதா மறைவிற்குப் பின் தமிழக அரசியலில் பா.ஜ.க. ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வம் ஆகியோர்களுக்கு முரண்பாடு ஏற்பட்டபோது அவர்களை சமாதானம் செய்து சேர்த்து வைத்தவர் மோடி. முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் துணை முதல்வராக இருக்க சம்மதம் தெரிவித்தது எதனால் என்பது தெரியவில்லை.

எப்போதுமே ஜாதிவெறி, மதவெறி பிடித்தவர்களுக்கு தமிழக மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா வெற்றி பெற்றபோது தென்னிந்தியாவில் மட்டும் அவர்களால் சாதிக்க முடிய வில்லை. தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலையே வீசுகிறது. அ.தி.மு.க. ஆட்சி மோடியின் வித்தைகளுக்கு கட்டுப்பட்டு முடங்கிப்போய் கிடக்கிறது. இதனால் சட்டம் ஒழுங்கு சீராக இல்லை.

சமூக பாதுகாப்பு இல்லை. ஜாதியின் பேரால் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது நாகரீகத்தின் உச்சமாகும். அரசு செயலிழந்த அரசாக உள்ளது. மோடிக்கு எதிரான கருத்து மக்களிடையே உள்ளது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு இடைத் தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும்.

இல்லையெனில் தி.மு.க. வுக்கு ஆதரவான நிலை மாறிவிட்டது. மோடி- எடப்பாடி கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்புகின்றார்கள் என்ற நிலை ஏற்பட்டுவிடும். வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வினர் அ.தி.மு.க.வை மிரட்டி 234 தொகுதிகளில் 100 தொகுதிகளையாவது வாங்கி போட்டியிடுவார்கள்.

தமிழ்நாட்டில் சட்ட மன்றத்தில் பா.ஜ.க. இடம் பெறும் நிலை வந்தால் தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது. தமிழ்நாட்டை அவர்கள் துவம்சம் செய்து விடுவார்கள். எனவே தான் நாம் காங்கிரசை ஆதரித்து வருகிறோம். காங்கிரஸ் கட்சி தலித்துகளுக்கு உரிய மரியாதை கொடுத்து வருகிறது. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் கக்கனுக்கு உள்துறை மந்திரி கொடுக்கப்பட்டது என்பதை நினைவு கொள்ள வேண்டும்.

எனவே நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை வெற்றி பெற செய்ய வேண்டும். என்று அவர் பேசினார். 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top