குர்திஷ் போராளிகள் மீது தாக்குதல்; துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா

நாடற்றவர்களாக நான்கு நாடுகளில் வசித்து வருபவர்கள் குர்திஷ் இன மக்கள் .தங்களுக்கான நாட்டை உருவாக்க தொடர்ந்து போராடி வருகிறார்கள் .சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள குர்திஷ் மக்களை குர்திஷ் மக்கள் பாதுகாப்புப் படை என்ற போராளிகள் அமைப்பு பாதுகாக்கிறது. 

அந்நாட்டில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவதில் அமெரிக்க படைகள் மற்றும் சிரிய கிளர்ச்சிப் படைகளுடன் இணைந்து குர்திஷ் போராளிகள் குழு போரிட்டது. மேலும், பிடிபட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் குர்திஷ் மக்கள் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த போராளிகள் குழு குர்திஷ்தான் என்ற தனி நாடு அமைக்கும் நோக்கில் சிரியாவில் குர்திஷ்தான் தொழிலாளர்கள் கட்சி என்ற அமைப்பை ஏற்படுத்தி நடத்தி வந்தது. 

இதற்கிடையில், சிரியாவின் வடக்கு பகுதியில் குர்திஷ் படையினருக்கு ஆதரவு அளித்து வந்த அமெரிக்கப் படைகள் வாபஸ் பெற்றதையடுத்து, துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் சிரிய நாட்டு எல்லைக்குள் சுமார் 32 கி.மீ. அளவிலான பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி அதில் தங்கள் நாட்டில் உள்ள அகதிகளை குடியமர்த்த திட்டம் தீட்டி ‘அமைதி வசந்தம்’ என்ற பெயரில் கடந்த 9-ம் தேதி முதல் சிரியா எல்லைக்குள் நுழைந்து அங்குள்ள குர்திஷ் மக்கள் மீது தரைவழி மற்றும் வான்வழி மூலமாக ஆவேச தாக்குதல் நடத்தி வருகிறார்

இந்த தாக்குதல் காரணமாக லட்சக்கணக்கான குர்திஷ் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி வருகின்றனர். மேலும், இந்த  தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் மற்றும் குர்திஷ் போராளிகள் என இதுவரை 500-க்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

துருக்கி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக குர்திஷ் போராளிகள் சிரியா அரசுப்படைகளின் உதவியை நாடியுள்ளனர். ரஷியா ஆதரவு பெற்ற சிரிய அரசுப்படைகள் துருக்கி தாக்குதலுக்கு பதில் தாக்குதல் கொடுக்கும் விதமாக எல்லையில் குவிக்கப்பட்டு வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதட்டம் நிலவி வருகிறது. 

இதற்கிடையில், துருக்கியின் ஆக்ரோஷ தாக்குதல் காரணமாக சிரியாவின் வடக்கு பகுதியில் குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிறையில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் தற்போது போதிய கண்காணிப்பு இல்லாததால் அங்கிருந்து தப்பிச்சென்று வருகிறனர். 

தற்போதைய கணக்கீட்டின்படி, துருக்கி நடத்திவரும் தாக்குதல் காரணமாக இதுவரை 800-க்கும் அதிகமான ஐ.எஸ். பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த சிறையை விட்டு தப்பிச்சென்று விட்டதாக குர்திஷ் மக்கள் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் இன்று ஆளும் நீதி மற்றும் மேம்பாட்டு கட்சியின் பாராளுமன்ற பிரிவினரை சந்தித்தார். ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிறையிலிருந்து தப்பவதாக சொல்லப்படுவதை மறுத்தார் ஆனாலும், வடக்கு சிரியாவில் சுமார் 32 கி.மீ. அளவிலான பாதுகாப்பு வளையத்தை உருவாக்கும் வரை எந்த பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை. அமெரிக்காவின் தலையீடு ,பொருளாதாரத் தடை பற்றியும் எவ்வித கவலையும் இல்லை என அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் குர்திஷ் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் துருக்கியின் தாக்குதல் காரணமாக தப்பிச்செல்வது மிகுந்த கவலையை தருவதாக பல நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதற்கிடையில் துருக்கி மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

துருக்கியின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் ஏற்கனவே  கடும் கண்டனம் தெரிவித்தன. போர் நடவடிக்கைகளை நிறுத்தாவிடில்,  துருக்கியின் பொருளாதாரம் முற்றிலும் அழிக்கப்படும் என 4 தினங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டிரம்ப், துருக்கி அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். 

ஆனால், இந்த எச்சரிக்கையை துருக்கி அரசு கண்டுகொள்ளவில்லை. ‘அமெரிக்க அதிபர் டிரம்பின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி எங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ள மாட்டோம். குர்து போராளிகள் மீதான போர் நடவடிக்கைகளை நிறுத்தப்போவதில்லை’ என துருக்கி நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி மெவுல்ட் காவ்சக்லோ தெரிவித்தார். அதன் பின்னரும் துருக்கி தனது போர் நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது .

இந்நிலையில், துருக்கி மீதான பொருளாதாரத் தடைகளை விதிக்க தனது நிர்வாகத்திற்கு அதிகாரம் அளிக்கும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். துருக்கி அரசு மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளதாகவும், துருக்கியுடனான 100 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையையும் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அதே நேரத்தில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசிக்கு டிரம்ப்  எழுதிய கடிதத்தில் துருக்கி பிரச்சினையை ‘தேசிய அவசரநிலை’யாக  அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் கருவூலத் துறை, ஏற்கனவே துருக்கி பாதுகாப்பு மந்திரி ஹுலுசி அகர், உள்துறை மந்திரி சுலேமான் சோய்லு மற்றும் எரிசக்தி மந்திரி பாத்தி டான்மேஸ் ஆகியோரை அதன் பொருளாதாரத் தடைகள் பட்டியலில் வைத்துள்ளது.

இது குறித்து டிரம்ப் கூறுகையில், ‘துருக்கி தலைவர்கள் இந்த ஆபத்தான மற்றும் அழிவுகரமான போர் நடவடிக்கைகளை தொடர்ந்தால் துருக்கியின் பொருளாதாரத்தை விரைவில் முழுமையாக அழிக்க நான் தயாராக இருக்கிறேன்,

இந்த பொருளாதார தடை உத்தரவானது, பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நடவடிக்கைகள்,  வடகிழக்கு சிரியாவில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை மேலும் மோசமடைய வழிவகுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள துருக்கிய அரசாங்கத்தின் தனிநபர்கள், நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை பரிசீலித்து விதிக்க மாநில மற்றும் கருவூலத் துறைகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.

துருக்கி மீதான பொருளாதாரத் தடைகள், நிதித்துறைகள் மீதான தடை, சொத்துக்களைத் தடுப்பது, அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுப்பது உள்ளிட்ட பரந்த அளவிலான நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும். 100 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தக ஒப்பந்தத்தில் துருக்கியுடனான பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா உடனடியாக நிறுத்திவிடும்’ என்று கூறியுள்ளார் .


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top