பாண்டிச்சேரியில் கிரண்பேடிக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

பாண்டிச்சேரி  ஏனாம் பகுதிக்குள் சென்றுள்ள துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக கருப்புக் கொடி ஏற்றப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது

பாண்டிச்சேரியின் ஏனாம் பகுதி ஆந்திர மாநிலம் அருகேயுள்ளது. இங்கு இன்றும் நாளையும் (அக்.15, 16) துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு மேற்கொள்கிறார். இதற்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும் சுற்றுலாத் துறை அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

“ஏனாம் பகுதியின் வளர்ச்சித் திட்டங்களைத் தடுக்கும் கிரண்பேடி இங்கு வரத் தேவையில்லை. மக்கள்நலத் திட்டங்களை அனுமதித்தால் வரவேற்போம். இல்லையென்றால் கிரண்பேடிக்கு பாடம் புகட்டப்படும்” என செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

ஏனாமில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள ஒரு தீவு ஆந்திராவுக்கா அல்லது புதுச்சேரிக்கா என்ற வழக்கு நிலுவையில் உள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த கந்தராவ் என்பவருக்கு ஆதரவாக இவ்வழக்கில் செயல்படுமாறு கிரண்பேடி தன்னை வலியுறுத்தியதாக அமைச்சர் குற்றம் சாட்டியிருந்தார். தொகுதி எம்எல்ஏவான தனக்கு தெரிவிக்காமல் ஏனாம் வரும் கிரண்பேடி மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வரப்படும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு ஏனாம் சென்றார் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி. இன்று காலை ஆய்வுக்குச் செல்லும் அவருக்கு எதிராக பலர் கருப்பு சட்டை அணிந்தும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ‘GO BACK KIREN BEDI’ என பேனர்கள் வைக்கவும் அமைச்சரின் ஆதரவாளர்கள் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் ஏற்படும் பிரச்சினையைச் சமாளிக்க ஆந்திராவில் இருந்து கூடுதல் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top