மத்திய அரசின் உதய் திட்டத்தால் தமிழக மின்சார வாரியத்திற்கு பெரும் இழப்பு!

தமிழ்நாடு மின்சார வாரியம் மத்திய அரசின் உதய் திட்டத்தில் இணைந்து  அமல்படுத்தியதால் மின்சார  வாரியத்தின்   இழப்பு ரூ.9 ஆயிரத்து 256 கோடியாக உயர்ந்து உள்ளது. இதனை சீரமைக்க மின்சார உற்பத்தியையும் மின்சார வினியோகத்தையும் தனித்தனியாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் அனல் மின்நிலையம், புனல் மின்நிலையம், காற்றாலைகள் மற்றும் கியாஸ் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மின்சார உற்பத்தி செய்கிறது. இதனை பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வினியோகம் செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் வாரியம் செயல்பட்டு வருகிறது.

புதிய மின்கட்டமைப்புகள் ஏற்படுத்துவது, பழைய மின்கட்டமைப்புகள் பராமரிப்பு செலவு, தனியாரிடம் மின்சாரம் வாங்கும் செலவு, நிலக்கரி கொள்முதல், வாரிய ஊழியர்களுக்கு சம்பளம், கடனுக்கான வட்டி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் செலவினங்களும் ஏற்படுகிறது. ஆண்டுக்கு ஆண்டு மின்சாரம் வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்குமான இடைவெளி அதிகரித்து வருகிறது. இதனால் வாரியத்தின் நிதி நிலமை மோசமடைந்து வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அவ்வப்போது மின்சார கட்டணத்தை மறுபரிசீலனை செய்யத் தவறியதால் தான் வாரியத்துக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டு வருகிறது. மின்சார கட்டணம் கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு உயர்த்தப்பட்டது. உதய் திட்டம் குறிப்பிட்ட கால இடைவெளியில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற போதிலும் கட்டணம் சரிபார்க்கப்படாமல் உள்ளது.

மின்சார நுகர்வோர்களுக்கு முதல் நூறு யூனிட்டுகளை இலவசமாக வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி உள்ளது. இதன் மூலம் ரூ.2 ஆயிரத்து 500 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. முதல் நூறு யூனிட்டுகளை இலவசமாக வழங்குவதற்கு முன்பாக ஒரு யூனிட் மின்சாரம் ரூ.3.50 ஆக இருந்தது. ஆனால் தற்போது ஒரு யூனிட்டுக்கு ரூ.2.50 மட்டுமே மானியமாக அரசு வழங்குகிறது.

வாரியத்தை மீட்டு எடுப்பதற்காக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மின்சார கட்டணத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அதனை தொடர்ந்து 2014-2015-ம் ஆண்டில் ரூ.12 ஆயிரத்து 750 கோடிக்கும் அதிகமாக இருந்த வாரியத்தின் இழப்பு, 2015-2016-ம் ஆண்டில் ரூ.5 ஆயிரத்து 750 கோடியாக குறைக்கப்பட்டன. இது மேலும் 2016-2017-ம் ஆண்டு ரூ.4 ஆயிரத்து 350 கோடியாக குறைக்கப்பட்டது.

[இந்நிலையில்,தமிழ்நாடு மின்சார வாரியம், மத்திய அரசுடன் இணைந்து உதய் திட்டத்தை அமல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டது. இத்திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது கடுமையாக எதிர்த்தார். ஆனால், அவர் இறந்த பிறகு வந்த அதிமுக ஆட்சி மத்தியில் ஆளும் பாஜக அரசின் கட்டளைக்கு பணிந்து தமிழக அரசின் மின்சாரக் கொள்கையை அடகு வைத்து விட்டது.உதய் திட்டத்தில் இணைந்ததன் பலனாக பெரும் கடன் சுமையை ஏற்கவேண்டியதிருக்கிறது.]

ரூ.7 ஆயிரத்து 760 கோடி  பெரும் இழப்பு கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 78 சதவீதம் அதிகமாக இருந்தது. தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு இழப்பு கடந்த நிதியாண்டில் (2017-2018-ம் ஆண்டு) ரூ.7 ஆயிரத்து 760 கோடியிலிருந்து 2018-2019-ம் ஆண்டில் ரூ.9 ஆயிரத்து 256 கோடியாக இழப்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் வாரியத்தின் நிதி நிலமை மிகவும் மோசமடைந்து வருகிறது.

அத்துடன் தொழிற்சாலை நுகர்வோர்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின்சாரத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றனர். இதனால் மின்சார விற்பனையின் வளர்ச்சியில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டு உள்ளது.

தற்போது மின்சார கட்டணத்தில் திருத்தம் கொண்டு வந்த நிலையில் ஓரளவு மீண்டு வர முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இருந்தாலும் வாரியம் புத்துயிர் பெறுவதற்கான ஒரேவழி, மின்சார வினியோகம் மற்றும் மின்சார உற்பத்தியை தனி தனி நிறுவனங்களாக பிரிக்க வேண்டும். அப்போது தான் மின்சார வினியோகத்தை அதிகரிப்பதுடன், நுகர்வோர்களுக்கு சிறந்த சேவையையும் வழங்க முடியும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top