ஊதிய உயர்வு;அமைச்சரின் மெத்தனம்;அரசு டாக்டர்கள் 25-ந்தேதி முதல் தொடர் வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு குறித்து அமைச்சரின் 6 வார கெடு முடிவடைந்த நிலையில் அவரின் மெத்தனத்தை கண்டித்தும் அரசு தரப்பில் உறுதியான அறிவிப்பு வெளிவராவிட்டால் 25-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.

அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் கடந்த 2 ஆண்டு காலமாக பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 23-ந்தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 6 அரசு டாக்டர்கள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது 6 வாரங்களில் கோரிக்கையை நிறைவேற்ற தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்கத்தின் இயக்குனர் டாக்டர் செந்தில்ராஜ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த 6 வாரக்கெடு நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

இதையடுத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் தங்களது பொதுக்குழுவை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கூட்ட நேற்று முடிவு செய்தனர். இந்த கூட்டத்துக்கு மருத்துவமனை ‘டீன்’ அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தங்களது கூட்டத்தை போராட்டம் நடத்திய இடத்திலேயே நடத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்துக்கு பின்னர் அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் நிருபர்களிடம் கூறியதாவது:-

6 வாரத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதது குறித்து அரசு அதிகாரிகளிடம் கேட்டோம். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் தற்போது எந்த முடிவையும் எடுக்கவில்லை எனவும், தேர்தல் விதிமுறை முடிவுக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினோம். இந்த கூட்டத்தில் வரும் 24-ந்தேதி அரசு தரப்பில் கோரிக்கை குறித்த அறிவிப்பு வரவில்லை என்றால், வரும் 25-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்ததில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.என்று கூறியுள்ளனர்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top