ஜோலார் பேட்டையிலிருந்து சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு வருவது நிறுத்தம்

வேலூர் ஜோலார் பேட்டையிலிருந்து சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு வருவதை தற்காலிகமாக நிறுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது

சென்னை நகர மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஜோலார்பேட்டையிலிருந்து ரெயில் மூலம் சென்னைக்கு தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை மக்களின் வேண்டுகோள் படி, தவிர்க்கமுடியாமல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்காக ரூ.65 கோடி ஒதுக்கீடு செய்தார்.

வேலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

மேட்டுசக்கர குப்பத்தில் இருந்து குழாய் மூலம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு குடிநீர் கொண்டு வரப்பட்டு ஜோலார்பேட்டையில் ரெயிலில் குடிநீர் நிரப்பும் வசதி செய்யப்பட்டது.

அதன்படி கடந்த ஜூலை மாதம் 12-ந் தேதி முதல் ஜோலார்பேட்டையில் ரெயில் நிலையத்திலிருந்து 50 வேகன்களைக் கொண்ட ரெயில் 25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் வில்லிவாக்கம் ரெயில் நிலையம் சென்றது. அதனை தொடர்ந்து ஜூலை 25-ந்தேதி 2-வது ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில்கள் மூலம் சென்னைக்கு தினமும் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு சென்றனர். இந்த தண்ணீர் மத்திய சென்னை பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டது.

தற்போது வீராணம் ஏரி நிரம்பியுள்ளது. மேலும் ஆந்திர மாநிலத்தில் பெய்த மழை காரணமாக கிருஷ்ணா நதியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி வருகின்றன. வீராணம், கிருஷ்ணா குடிநீர் சென்னைக்கு வருவது அதிகரித்துள்ளது.

இதனால் ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் குடிநீர் கொண்டு வருவதை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்து உள்ளது தமிழக அரசு.. இன்று காலை ஜோலார் பேட்டையில் இருந்து 159-வது குடிநீர் ரெயில் புறப்பட்டது. கடைசி குடிநீர் ரெயில் என்பதால் இதற்கு அதிகாரிகள் பூஜை செய்து வழியனுப்பி வைத்தனர்.

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு இதுவரை 39 கோடியே 75 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ரெயிலில் ஒரு தடவை தண்ணீர் கொண்டுசெல்ல ரூ.8.60 லட்சம் செலவாகியுள்ளது. அதன்படி இதுவரை ரெயிலில் சென்னைக்கு தண்ணீர் கொண்டு சென்றதற்கு ரூ.13.67 கோடி வரை செலவாகியுள்ளது.ஆனால் இதற்கு ஒதுக்கிய தொகை ரூ.65 கோடி என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையில் குடிநீர் பற்றாக்குறை தீர்ந்து வருவதால் 2 குடிநீர் ரெயிலும் திருப்பி அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.உண்மையில் சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை தீர்ந்து விட்டதா? ஒவ்வொரு தெருவிலும் காலையில் அமைச்சர்கள் வந்து பார்த்தால் தெரியும் மக்கள் தண்ணீருக்கு எவ்வளவு அல்லல் படுகிறார்கள் என்று! அதிகாரிகள் சொல்வதை அமைச்சர்கள் நம்பாமல் தெருவில் வந்து பாருங்கள் சென்னையின் உண்மை முகம் தெரியும்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top