‘பலவீனமாக ஒளிரும் ஒரே சுடர் சுதந்திரம்’ ப.சிதம்பரம் ட்விட்;ஜாமீன் மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், நீதிமன்ற காவலில் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததை தொடர்ந்து, சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அவரை டெல்லியில் உள்ள தனிக்கோர்ட்டில் நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள்.

விசாரணை தொடங்கியதும், சி.பி.ஐ. தரப்பில் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்க அனுமதி கோரப்பட்டது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், ப.சிதம்பரத்துக்கு சிறைக்கு வெளியே மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதன்பிறகு சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அஜய் குமார் குஹர், ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை வருகிற 17-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். இதற்கிடையே, இந்த வழக்கில் டெல்லி ஐகோர்ட்டு தனக்கு ஜாமீன் வழங்க மறுத்ததை எதிர்த்தும், தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய கோரியும் ப.சிதம்பரம் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க உள்ளது. 

இந்நிலையில் ,ப சிதம்பரம் தனது குடும்பத்தினர் மூலம் டுவிட்டரில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார். நேற்று அவர் வெளியிட்ட பதிவில், “சகோதரத்துவம் செத்து விட்டது. சாதி வெறியும், மத வெறியும் முன்னுக்கு வந்து விட்டன. சமத்துவம் என்பது தொலைதூர கனவாக இருக்கிறது. எல்லா ஆதாரங்களும் இந்தியர்களிடையே சமத்துவமின்மை வளர்ந்து வருவதை காட்டுகின்றன. பலவீனமாக ஒளிரும் ஒரே சுடர் சுதந்திரம் மட்டும்தான். அது பிரகாசமாக எரியுமா அல்லது செத்துப்போகுமா? காலம்தான் சொல்ல முடியும்” என கூறி உள்ளார்.

மேலும், “மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி ஓராண்டு கால கொண்டாட்டம் தொடங்கியுள்ள தருணத்தில், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எங்கே என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டும்” என்றும் கூறி உள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top