எஸ்சி,எஸ்டி சட்டம்: சீராய்வு வழக்கு; முந்தைய உத்தரவை திரும்ப பெற்றது உச்ச நீதிமன்றம்

எஸ்சி,எஸ்டி சட்டம் தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த சீராய்வு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,தனது முந்தைய உத்தரவை திரும்ப பெற்றுள்ளது.எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின்கீழ் புகார் அளித்தால், உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் தீவிர விசாரணைக்கு பின்பே கைது செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது. 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20ம் தேதி இந்த தீர்ப்பை வழங்கியது.


வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போகச்செய்யும் வகையில், இந்த தீர்ப்பு அமைந்திருந்ததாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், கடும் அழுத்தத்துக்குள்ளான மத்திய அரசு,  பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் திருத்தம் செய்து நிறைவேற்றியது. அதன்படி, இந்த சட்டத்தின்கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்கள் முன்ஜாமீன் பெற முடியாது.

அதேசமயம் உச்ச நீதிமன்ற  தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி, அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஷ்ரா, வினீத் சரண், ரவீந்திர பட் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

அப்போது, எஸ்சி,எஸ்டி சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் முன்னர் பிறப்பித்த உத்தரவின் சில அம்சங்களை திரும்ப பெறுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதாவது, எஸ்சி,எஸ்டி சட்டத்தின்கீழ் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தாலே குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்யக்கூடாது என்ற முந்தைய உத்தரவை திரும்ப பெற்றுள்ளனர்.

எஸ்சி,எஸ்டி சட்டத்தின்கீழ் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தாலே கைது செய்ய சட்டத்தில் இடம் உள்ளது என்று நீதிபதிகள் கூறினர்.

“எஸ்சி, எஸ்டி மக்கள் இன்னும் தீண்டாமையை, துஷ்பிரயோகத்தை எதிர்கொள்கிறார்கள். சமூக ரீதியாக ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். சம உரிமைக்கான அவர்களின் போராட்டம் இன்னும் முடிந்தபாடில்லை” என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top