ஆர்.கே.நகர் தேர்தல் ரூ.89 கோடி பட்டுவாடா; தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; மு.க.ஸ்டாலின் அறிக்கை

ஆர்.கே.நகர் தேர்தலின் போது ரூ.89.5 கோடி பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது இந்திய தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் /..வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, முதல்-அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் 2 லட்சத்து 24 ஆயிரத்து 145 வாக்காளர்களுக்கு, தலா ரூ.4 ஆயிரம் வீதம், ரூ.89.5 கோடி பணம் பட்டுவாடா செய்ய வைத்திருந்த பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து வருமான வரித்துறை கைப்பற்றியது தொடர்பான முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று அ.தி.மு.க. அரசு சென்னை ஐகோர்ட்டில் அறிவித்திருப்பதற்கு தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அந்த இடைத்தேர்தலின்போது, மாவட்ட தேர்தல் அதிகாரியாக இருந்த கார்த்திகேயன் இந்த முதல் தகவல் அறிக்கை ரத்தானது குறித்து இதுவரை மேல்முறையீடு செய்யாமல் இருப்பதும், அதை மாநில தலைமை தேர்தல் அதிகாரியும், இந்திய தேர்தல் ஆணையமும் கை கோர்த்து ஏதோ உள்நோக்கத்துடன் வேடிக்கைபார்ப்பதும் நேர்மையான, சுதந்திரமான தேர்தலுக்கு மிகப்பெரிய நெருக்கடியையும், ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சத்தியநாராயணா மற்றும் சேசசாயி முன்பு வந்தபோது, ‘எப்.ஐ.ஆரை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை’ என்று அ.தி.மு.க. அரசு கூறியிருக்கிறது. ‘அந்த வழக்கு மேல்முறையீட்டுக்கு உகந்தது அல்ல’ என்று அரசு சட்ட ஆலோசனை வழங்கியுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறியிருக்கிறார்.

தேர்தல் காலத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை குறித்து நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு முழு சுதந்திரமும், அதிகாரமும் இருந்தும் மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயனின் சட்ட விரோத செயலை கண்டு கொள்ளாமல் இருப்பது கவலையளிக்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருக்கும் கார்த்திகேயன், ஆளுங்கட்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு கட்டுப்பட்டு தேர்தல் ஆணையத்தின் உத்தரவையே அவமதிப்பதும், வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த அறிக்கையை உதாசீனப்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது.

அ.தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் முதல்-அமைச்சரின் உறவினர்கள் ஆகியோர் மீது அடுத்தடுத்து பல வருமான வரித்துறை சோதனைகளை நடத்தி, பிறகு அந்த வழக்குகளை எல்லாம் இப்படி நீர்த்துப்போக வைக்கவும், அவர்களை சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப வைக்கவும் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு துணை போவதும் ஊழல் நடவடிக்கைகளில் மத்திய அரசின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.

ஆகவே ரூ.89.5 கோடி ஆர்.கே.நகர் பணம் பட்டுவாடா பட்டியல் கைப்பற்றப்பட்டது குறித்து முறையாக புகார் அளிக்காத தேர்தல் அதிகாரி, பெயர்களே இல்லாமல் எப்.ஐ.ஆர். போட்ட போலீஸ் அதிகாரி, உயர்நீதிமன்ற உத்தரவின்கீழ் முறையாக இந்த வழக்கினை கண்காணிக்காத அப்போதைய இணை போலீஸ் கமிஷனர், இதுவரை தனி நீதிபதியின் உத்தரவினை எதிர்த்து மேல்முறையீடு கூட செய்யாத மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகிய அனைவர் மீதும் இந்திய தேர்தல் ஆணையமே தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் இந்த வழக்கினை சி.பி.ஐ.க்கு மாற்றவேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் கமிஷனரே ஐகோர்ட்டில் வலியுறுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால் இந்திய வாக்காளர்கள் தேர்தல் நடைமுறைகளின் மீதும், தேர்தலை நடத்தும் அதிகாரிகள் மீதும் கொண்டுள்ள நம்பகத்தன்மை பாழ்பட்டுப் போய்விடும் என்பதையும் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top