சவுதி எண்ணெய் ஆலை தாக்குதல்;50 சதவீத உற்பத்தியை நிறுத்தியது சவுதி அரேபியா! எண்ணெய் விலை உயர்வு!!

சவுதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து 50 சதவீத எண்ணெய் உற்பத்தியை சவுதி அரேபியா நிறுத்தியது.சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இருந்து 330 கி.மீ. தொலைவில் புக்யாக் என்ற இடத்தில் உள்ள அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலையும் குறிவைத்து நேற்று முன்தினம் ஆளில்லா விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.


இதனால் அங்கு தீப்பிடித்து எரிந்தது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதாக சவுதி அரசு தெரிவித்தாலும், சுமார் 50 லட்சம் பீப்பாய் எண்ணெய் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு ஏமனில் இருந்து செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பு ஏற்றனர்.

இந்த நிலையில், ஆளில்லா விமான தாக்குதலை தொடர்ந்து எண்ணெய் உற்பத்தியை 50 சதவீதமாக குறைத்திருப்பதாக சவுதி அரேபியா நேற்று அறிவித்தது. இது குறித்து இளவரசரும், அந்நாட்டின் எரிசக்தி துறை மந்திரியுமான அப்துல் அஜீஸ் பின் சல்மான் கூறியதாவது:-ஏமன் கிளர்ச்சிப்படையினரின் தாக்குதலால் அராம்கோவின் அப்காய்க், குரெய்ஸ் ஆகிய எண்ணெய் ஆலைகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்திவிட்டோம். இதனால் சவுதியில் ஏறக்குறைய 50 சதவீத எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 57 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

உலகிற்கு தேவையான 10 சதவீத கச்சா எண்ணெய் சவுதி அரேபியாவில் உற்பத்தியாகும் நிலையில், அங்கு நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலும், அதன் காரணமாக ஏற்பட்ட உற்பத்தி குறைப்பும் எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விலை உயர்வு என்னும் அபாயத்துக்கு வழி நடத்தி விடும்.

இதற்கிடையே, சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலை மீது ஈரான்தான் தாக்குதல் நடத்தியது என அமெரிக்கா தன் அரசியல் நாடகத்தை பகிரங்கமாக அரங்கேற்றுகிறது.

  
இது குறித்து அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உலகின் எரிசக்தி வினியோகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் ஏமனில் இருந்து நடத்தப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஈரான்தான் இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறது.

இது மட்டும் இன்றி இதற்கு முன் சவுதிஅரேபியா மீது நடத்தப்பட்ட 100 தாக்குதல்களுக்கு பின்னால் ஈரான் உள்ளது. அதே நேரத்தில் அந்நாட்டின் அதிபர் ஹசன் ருஹானி மற்றும் வெளியுறவு மந்திரி ஜாவத் ஷெரீப் ஆகியோர் தூதரக ரீதியில் செயல்படுவதாக பாசாங்கு செய்கிறார்கள்.

ஈரானின் தாக்குதல்களை பகிரங்கமாகவும், சந்தேகத்திற்கு இடமின்றியும் கண்டிக்க அனைத்து நாடுகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். எரிசக்தி சந்தைகள் நன்கு செயல்படுவதை உறுதி செய்வதற்காக அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஏற்கனவே, ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்கா, ஈரானிடமிருந்து பெட்ரோல்-எரிபொருள் வாங்க வேண்டாம் என்று தனது நட்பு நாடுகளையும் கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் காலகாலமாக ஈரானிடமிருந்து எரிபொருள் வாங்கிக்கொண்டிருந்த இந்தியா அமெரிக்க வேண்டுகோளுக்கு இணங்கி ஈரானிடமிருந்து எரிபொருள் வாங்குவதை நிறுத்தி உள்ளது  

ஆனால், அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அப்பாஸ் மவ்சாவி கூறுகையில், ‘‘இதுபோன்ற பலனற்ற மற்றும் குருட்டு குற்றச்சாட்டுகள் புரிந்துகொள்ள முடியாதவை மற்றும் அர்த்தமற்றவை’’ என்றார்.

மேலும் அவர் ‘‘ஈரான் மீது அதிகபட்ச அழுத்தம் தர வேண்டும் என்ற அமெரிக்காவின் கொள்கையே இது போன்ற அதிகபட்ச பொய்களுக்கு வழிவகுக்கிறது. ஏமனில் சவுதி அரேபியாவின் ஆக்கிரமிப்புக்கு ஏமன் நாட்டினர் தங்களின் எதிர்ப்பை காட்டியுள்ளனர்’’ எனவும் அவர் கூறினார்.

இந்நிலையில் , ஞாயிற்றுக்கிழமை சந்தை நிலவரப்படி கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் பிரெண்டு கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 60.15 அமெரிக்க டாலராக இருந்தது. அதன்பின்னர் 12 சதவீதம் உயர்ந்து,  ஞாயிற்றுக்கிழமை 70.98 டாலராக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.  வரும் நாட்களிலும் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு உள்ளது.


ஏற்கனவே அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக போர் காரணமாக, சர்வதேச பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்தால், சர்வதேச பொருளாதாரத்தில் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கருதப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top