‘பேஸ்புக்’குடன் ஆதார் எண்ணை இணைக்க திட்டம் உள்ளதா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக சட்டம் இயற்றும் திட்டம் உள்ளதா? என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.


பேஸ்புக்குடன் ஆதார் எண்ணை இணைக்கும் கோரிக்கை தொடர்பாக சென்னை, மும்பை உள்ளிட்ட ஐகோர்ட்டுகளில் நடைபெற்று வரும் அனைத்து வழக்குகளையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று கோரி ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.


இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை கடந்த மாதம் 20-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீபக்குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை ஐகோர்ட்டில் தற்போது நடைபெற்று வரும் இது தொடர்பான வழக்கு விசாரணையை தொடரலாம் என்றும், ஆனால் முக்கியமான உத்தரவுகள் எதையும் பிறப்பிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டனர். மேலும் இந்த கோர்ட்டுகள் பதில் மனு தாக்கல் செய்யவும், இதேபோல் மத்திய அரசு மற்றும் கூகுள், டுவிட்டர், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களும், செயலிகளின் நிர்வாகமும் பதில் மனுவை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாலாஜி சீனிவாசன், அரசு வக்கீல் டி.ஆர்.பி.சிவகுமார் ஆகியோர் ஆஜராகி, தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்து இருப்பதாக தெரிவித்தனர்.


அப்போது நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பினார்கள்.

மேலும், “சமூக வலைத்தளங்களுடன் ஆதாரை இணைப்பது குறித்து நாங்கள் இங்கு விசாரிக்க மாட்டோம். இந்த மனுக்களை ஐகோர்ட்டு விசாரிக்குமா? அல்லது சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்குமா? என்பது பற்றி மட்டுமே நாங்கள் முடிவு எடுப்போம். இது தொடர்பாக மத்திய அரசு ஏதாவது சட்டம் இயற்ற திட்டமிட்டு உள்ளதா?” என்றும் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பதில் அளிக்கையில், இந்த வழக்கு விசாரணையை ஐகோர்ட்டில் இருந்து சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றுவதில் மத்திய அரசுக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை என்று கூறினார்.

மேலும், இது தொடர்பாக ஏதேனும் சட்டத்தை அறிமுகப்படுத்த திட்டம் உள்ளதா? என்பது குறித்து மத்திய அரசிடம் உறுதிப்படுத்திய பிறகு தெரிவிப்பதாகவும் கூறினார்.

இதைத்தொடர்ந்து, வழக்கு விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top