கோவில் திருப்பணிக்கு என்று நன்கொடை வசூலித்த இந்து அமைப்பை சேர்ந்தவர் மீது வழக்கு!

திருப்பணி செய்வதாக கூறி கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் நன்கொடை வசூலிப்பதாக இந்து அமைப்பை சேர்ந்தவர் மீது தொடரப்பட்ட வழக்கிற்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாத்தூரை சேர்ந்தவர் திருஞானம். இவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமையான ஸ்ரீ சர்வ சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. ஆனால், இந்து அமைப்பை சேர்ந்தவர் என்று சொல்லப்படும் துரைராஜ் என்பவர் கோவில் திருப்பணி குழுவின் தலைவர் என்று தன்னை அறிவித்து கொண்டு, சாமியின் பெயரை சொல்லியும், கோவில் திருப்பணிக்கு என்று கூறியும் பக்தர்களிடமும், பொதுமக்களிடமும் பணம் வசூலிக்கிறார்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறையிடம் புகார் செய்தேன். இதையடுத்து, ‘பக்தர்கள் யாரும் நன்கொடை கொடுக்க வேண்டாம் என்றும், மோசடி பேர்வழிகளிடம் ஏமாற வேண்டாம்’ என்றும் எச்சரிக்கை செய்து இந்து சமய அறநிலையத்துறை செயல் அதிகாரி கோவில் முன்பு மிகப்பெரிய பதாகைகள் வைத்தார்.

இதை அகற்ற உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் துரைராஜ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

துரைராஜ் டாஸ்மாக் பார் நடத்துவதால், தன்னை மிகப்பெரிய அரசியல் பிரமுகர் என்றும், தனக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரது ஆதரவு உள்ளது என்றும் கூறி தொடர்ந்து நன்கொடையை வசூலித்து தன் சொந்த செலவுக்கு அதை பயன்படுத்தி வருகிறார்.

இதனால், அவர் மீது இந்து சமய அறநிலையத்துறை செயல் அதிகாரி, மாதவரம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகார் விசாரணையில் உள்ளது. அதன்பின்னரும் நன்கொடை வசூலிப்பதை அவர் நிறுத்தாததால், இந்து அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு கடந்த ஆகஸ்டு 19-ந் தேதி புகார் மனுக்கள் அனுப்பியும் பயன் இல்லை.

எனவே எனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.சிலம்புச்செல்வன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top