அதிமுகவின் சுயநல ஆதாயம், அரசின் மெத்தனம்; காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது- முத்தரசன்

அதிமுக அரசு தனது  சுயநல ஆதாயத்திற்காக   மெத்தனமாக இருந்து,  முறையாக தூர்வாராமல்  காவிரி நீரை வீணாக கடலில் கலப்பதற்கு காரணமாக இருக்கிறது என்று  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


கடந்த எட்டு ஆண்டு காலமாக தண்ணீர் பற்றாக்குறையால் காவிரி பாசனப் பகுதிகளில் குறுவை சாகுபடி நடைபெறவில்லை. ஒருபோக சம்பா சாகுபடியும் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

இந்த ஆண்டு ஆகஸ்டு 13-ல் மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டு ஒருமாத காலம் ஆகி விட்டது. மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றது.

அணையில் இருந்து 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டும் இதுவரை கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. சாகுபடி பணிகள் தொடங்கவில்லை. பாசன வடிகால்கள் தூர்வாரும் பணிகள் மற்றும் மராமத்து பணிகள் முழுமையாக நடைபெறவில்லை.

இந்த பணிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு, சுயநல ஆதாயம் தேடும் நோக்கத்துடன் காலதாமதமாக தொடங்கி, ஒதுக்கப்படும் நிதியை பங்கிட்டு கொள்ள வழிவகை காணப்படுகின்றது.

இதன் விளைவாக கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்லாமல் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். மறுபக்கம் எவ்வித பயன்பாடும் இன்றி தண்ணீர் கடலுக்கு செல்கின்ற கொடுமை நடந்து வருகின்றது. சென்ற ஆண்டு மட்டும் 227 டி.எம்.சி. தண்ணீர் கொள்ளிடம் வழியாக கடலுக்கு சென்று வீணானது.

காவிரி, வெண்ணாற்றில், கொள்ளிடத்தில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டினால் மட்டுமே மழைக்கால உபரி தண்ணீர் வீணாகாமல் சேமிக்க முடியும் என்பதை அறிந்திருந்தும் அ.தி.மு.க. அரசு இதில் கவனம் செலுத்தவில்லை. இதனால் நடப்பாண்டிலும் தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதை தடுக்க இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டு மேற்கொண்ட பணிகள் அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை குறித்து, தமிழக அரசு பகிரங்கமாக வெள்ளை அறிக்கை வெளியிட தண்ணீர் சேமிப்பு தடுப்பணைகள் கட்டுவதற்கான உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top