கர்நாடகா கேரளாவில் கனமழை; மேட்டூர் அணை 43-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை 43-வது முறையாக இன்று தனது முழு கொள்ளளவை எட்டியது.

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 

இன்று காலை கபினி அணையில் இருந்து 39 ஆயிரத்து 427 கன அடி தண்ணீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 23 ஆயிரத்து 333 கன அடி தண்ணீரும் என மொத்தம் 62 ஆயிரத்து 760 கன அடியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. 

தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று மதியம் 58 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை 90 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் நேராக ஒகேனக்கலுக்கு வருகிறது. இதனால் ஒகேனக்கலுக்கு அருவிகளுக்கு செல்லும் நடைபாதையை மூழ்கடித்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் சினி பால்ஸ் அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 

ஐந்தருவி தெரியாத அளவிற்கு தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க 31-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஒகேனக்கல்லில் நாடார் கொட்டாய், ஊட்டமலை உள்பட காவிரி ஆற்றுப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு போலீசார் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். 

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று மாலை 65 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை மேலும் அதிகரித்து 75 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 32 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 700 கன அடி தண்ணீரும் என மொத்தம் 33 ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் 16 கண் பாலம் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று காலை 116.72 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர் மட்டம் ஒரேநாளில் 2.5 அடி உயர்ந்து 119.34 அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தநிலையில் இன்று மதியம் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதன்மூலம் 43வது முறையாக மேட்டூர் அணை நிரம்பி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 76 ஆயிரம் கன தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 32 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நாகை, கடலூர் ஆகிய 12 மாவட்டங்களில் கரை யோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top