சந்திரயான்-2 லேண்டர் தரையிறங்குவதில் பின்னடைவு; கண் கலங்கிய இஸ்ரோ தலைவர்; தேற்றிய பிரதமர் மோடி!

சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து வந்த சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் எதுவும் உடனடியாகத் தெரியவில்லை. இதனை இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

எனினும் இந்திய விஞ்ஞானிகளின் முயற்சியையும், இஸ்ரோ தலைவர் சிவனையும் சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டினர்.

இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய ‘சந்திரயான்-2’ விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது.  இந்நிலையில் ‘சந்திரயான்-2’ விண்கல திட்டத்தின் முக்கிய மற்றும் சவாலான நிகழ்வு இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் நடந்தது. சந்திரயான்-2  விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ நிலவை நெருங்கிய நிலையில் அதிலிருந்து சிக்னல் எதுவும் வரவில்லை. அதில் இருந்து வரும் சிக்னலுக்காக விஞ்ஞானிகள் காத்திருந்தனர்.

இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், “லேண்டரில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு சிக்னல் எதுவும் வரவில்லை. இந்த தரவுகளை ஆராய்ந்து வருகிறோம். நிலவிற்கு 2.1 கிலோ மிட்டர் தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டரில் இருந்து தகவல் துண்டிக்கப்பட்டது என்று கூறினார்.

இரவு 2 மணிக்கும் மேலாக பெங்களூர் இஸ்ரோ மையத்தில்  விஞ்ஞானிகளுடனும் மாணவர்களுடனும் கலந்துரையாடிய மோடி, காலை எட்டு மணிக்கு மீண்டும் இஸ்ரோ மையத்திற்கு வந்து விஞ்ஞானிகள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.

அப்போது இஸ்ரோ விஞ்ஞானிகளின் இமைப்பொழுதும் சோர்ந்து போகாத ஈடு இணையற்ற உழைப்புக்கு தலைவணங்குவதாக மோடி தெரிவித்தார். இடையூறுகளால் இலக்குகளில் இருந்து விலக மாட்டோம் என்று உறுதியளித்த மோடி விஞ்ஞானத்தில் தோல்வி என்பதே கிடையாது.முயற்சி முயற்சி மீண்டும் மீண்டும் முயற்சிதான் என்றார். இஸ்ரோவின்  விண்வெளி திட்டங்கள், அதன் சாதனைகளை பாராட்டிய மோடி விஞ்ஞானிகளின் குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்தார்.

பின்னர் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து அவர் புறப்பட்டார்.

அப்போது, பிரதமர் அருகே நின்றிருந்த இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதார். அவரை கட்டியணைத்த பிரதமர் மோடி தட்டிக் கொடுத்து தேற்றினார்.

சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி பகல் 2.43 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

ரூ.978 கோடி ரூபாயில்  சந்திரயான்-2 திட்டத்தை இந்திய விஞ்ஞானிகள் செயல்படுத்தியதைக் கண்டு உலக  விஞ்ஞானிகள் வியக்கிறார்கள்.  சந்திரயான் 2 பணிக்கு சுமார் 140 மில்லியன் டாலருக்கும் குறைந்த அளவு செலவுதான் ஆகி உள்ளது. செவ்வாய் கிரகம் உள்ளிட்ட எதிர்கால விண்வெளி ஆய்வு பணிகளுக்கும் இந்த பணி பெரும் முக்கியத்துவம்  வாய்ந்தது.  அமெரிக்கா தனது அப்பல்லோ பணிக்காக 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவழித்தது.

இந்த திட்டத்தில் இந்தியாவின் ஒவ்வொரு அசைவையும் உலக நாடுகள் கண்காணித்து வருகின்றன. சந்திரனின் தென் துருவத்தை தொடுவதற்கு சற்று முன்பு சந்திரன் லேண்டர் விக்ரமுடன் தொடர்பை இழந்தது.

சந்திரனில் தரையிறங்க இந்தியாவின் முதல் முயற்சி தோல்வியில்  போயிருக்கலாம், ஆனால் லட்சிய சந்திரயான் 2 பணி தோல்வியில் இருந்து வெகு தொலைவில் உள்ளது.

சந்திரனில் விக்ரம் லேண்டர் இறங்குவதில் தோல்வி ஏற்பட்டாலும் இந்த திட்டத்திற்கு ஒரு வருடம் பணி ஆயுள் இருப்பதால் சந்திரயான் 2 சுற்றுப் பாதை நடவடிக்கையில் தொடர்ந்து இருக்கும். தூரத்திலே இருந்து நிலவை கணிகாணிப்பது  தொடரும்.

5 சதவிகித பணிகள் மட்டுமே இழக்கப்பட்டுள்ளன. விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யன் ரோவர் மீதமுள்ள 95 சதவீதம் அதாவது சந்திரயான் 2  சந்திரனை வெற்றிகரமாக சுற்றுகிறது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின்  இஸ்ரோ அதிகாரி தெரிவித்து உள்ளார்.

சந்திரயான் -2 சுற்றுப்பாதை நிலவின் பல படங்களை எடுத்து அடுத்த ஆண்டு இஸ்ரோவுக்கு அனுப்பலாம். சுற்றுப்பாதை அதன் நிலையை அறிய லேண்டரின் படங்களை எடுக்க முடியும் என்று இஸ்ரோ அதிகாரி மேலும் கூறினார்.  லேண்டருக்குள் இருந்த ரோவரின் ஆயுட்காலம் 14 நாட்கள் மட்டுமே.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top