வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி; தமிழகத்தில் இன்று பரவலாக மழைபெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று பரவலான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:–

தெற்கு ஆந்திரா கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மேலடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதனாலும் வெப்ப சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, தேனி, நெல்லை, நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு. சென்னையில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பம் பதிவாகும்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, காஞ்சீபுரம் மாவட்டம் தரமணி சென்னை மாவட்டம் அண்ணா பல்கலைக்கழக வளாகம் ஆகிய பகுதிகளில் அதிகபட்சமாக தலா 5 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், தாமரைப்பாக்கத்தில் தலா 3 செ.மீ. மழையும், சென்னை மாவட்டம் டி.ஜி.பி. அலுவலகம், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, நீலகிரி மாவட்டம் தேவலா, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு, காஞ்சீபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தில் தலா 2 செ.மீ. மழையும் பெய்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top