ப. சிதம்பரத்தின் சிபிஐ காவல் 30-ந்தேதி வரை நீட்டிப்பு; விசாரணை அமைப்புகளை கடுமையாக சாடிய கபில் சிபல்

முன்னாள் நீதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மீதுள்ள ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் வரும் 30-ந்தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதனால் மேலும் நான்கு நாட்கள் சிபிஐ அவரிடம் விசாரணை நடத்தும்.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு கடந்த 20-ந் தேதி தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் 21-ந்தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர்.

அவரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு, டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி, சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை தங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவரது விசாரணைக் காவல் இன்றுடன் நிறைவடைந்தது.


இதையடுத்து அவர் இன்று மாலை டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.         சிபிஐ தரப்பில் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த மேலும் ஐந்து நாட்கள் சிபிஐ காவலில் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதை எதிர்த்த ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில் சிபல் விசாரணை அமைப்புகள் ஆரம்பத்தில் இருந்தே மூடி மறைத்து வேலை செய்வதாக குற்றம்சாட்டினார்.

பின்னர் வழக்கறிஞர்களின் வாதம் தொடங்கியது. ப.சிதம்பரம் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை அமலாக்கத்துறை கசியவிட்டதாக குற்றம்சாட்டினார். 

ஆனால் இந்த குற்றச்சாட்டை சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மறுத்தார். சிதம்பரத்தின் வழக்கறிஞர்களிடம் பிரமாணப் பத்திரத்தை கொடுத்த பிறகே கசிந்துள்ளது என்றார்.

அதன்பின்னர் கபில் சிபல் பேசும்போது, “உயர்நீதிமன்றத்தில் சீலிட்ட உறையில் அமலாக்கத்துறை அளித்த ஆவணங்களில் என்ன உள்ளது என தெரியாத போது அது குறித்து எவ்வாறு வாதிட முடியும்?. மின்னஞ்சல்கள், சொத்துக்களை அமலாக்கத் துறையினர் கண்டுபிடித்துள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவிக்கிறார். ஆனால் இது குறித்து 3 விசாரணைகளின் போது அமலாக்கத்துறை எதுவும் தெரிவிக்கவில்லை. 

வழக்கு தொடர்பான ஆவணங்களை எப்போது கைப்பற்றினார்கள்?  இது தொடர்பாக அமலாக்கத்துறை விளக்க வேண்டும். சிதம்பரத்தின் பெயரில் உள்ள ஒரு சொத்தை காட்டினாலும் மனுவை திரும்ப பெற்று கொள்கிறோம்.


ஒரு மனிதனை இல்லாமல் ஆக்குவதற்காக அவரை கைது செய்கிறார்கள். ஒரு நபரை கைது செய்வதற்கு முன் அவர் குற்றவாளியா என விசாரணை அமைப்புகள் சிந்திக்க வேண்டும். விசாரணை அமைப்புகள் ஆரம்பத்தில் இருந்தே மூடி மறைத்து வேலை செய்கின்றன” என நீதிமன்றத்தின் அவலத்தை பூடகமாக குற்றம்சாட்டினார்

அதேவேளையில் ப.சிதம்பரம் தரப்பில் சிபிஐ காவலை நீட்டிக்கக்கூடாது என்று முறையிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை வரும் 30-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார் நீதிபதி.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top