கடல் சீற்றம்; அரசு தூண்டில் வளைவு அமைக்காததால் குமரி மாவட்டத்தில் 100 வீடுகளில் கடல் நீர் புகுந்தது

குமரி மாவட்டத்தில் உள்ள கடலோரக் கிராமத்தில் கடல் சீற்றம்.நூறு வீடுகளில் கடல் நீர் புகுந்தது.மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்    

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே அழிக்கால் பகுதியில் திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டதால் கடற்கரையையொட்டி உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது.

குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படும். இந்த ஆண்டும் அவ்வப்போது கடல் சீற்றம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மீனவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள்.

நேற்றிரவு ராஜாக்கமங்கலம் அருகே அழிக்கால் பகுதியில் திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டது. ராட்சத அலைகள் வேகமாக எழும்பின. கடற்கரையையொட்டி உள்ள வீடுகள் வரை கடல் நீர் வந்து சென்றது. நள்ளிரவு கடல் சீற்றம் அதிகரித்தது. ராட்சத அலைகள் 2 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை உயரத்திற்கு எழும்பியது.

இதனால் கடற்கரையையொட்டி உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. வீடுகளுக்குள் இருந்த பொருட்களையும் ராட்சத அலைகள் இழுத்து சென்றன. வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். நள்ளிரவு விடிய விடிய தூங்காமல் தவித்தனர்.

இன்று காலையிலும் அலையின் வேகம் அதிகமாக இருந்தது. இன்று காலையிலும் வீடுகளுக்குள் தொடர்ந்து தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி அவர்களது உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்தனர்.

வீடுகளுக்குள் கடல் நீர் செல்லாமல் இருக்க வீட்டின் வாசலில் மணல் மூட்டைகளையும் அடுக்கி வைத்திருந்தனர். அந்த தெரு வீதிகளிலும் கடல் நீர் புகுந்தது. தென்னந்தோப்புகளையும் கடல் நீர் சூழ்ந்தது.

கடல் சீற்றம் பற்றி தகவல் அறிந்ததும், வருவாய் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அதிகாரிகளிடம் பொதுமக்கள் தங்களுக்கு அந்த பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே கூறி வருகிறோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எங்களது கிராமமே அழிந்து விடும் என்று கூறினார்கள். இது தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

ராஜாக்கமங்கலம் துறை, குளச்சல், மார்த்தாண்டம் துறை, வள்ளவிளை, தூத்தூர், இரயுமன்துறை, பூத்துறை பகுதிகளிலும் கடல் சீற்றமாக காணப்பட்டது. கடல் சீற்றத்தின் காரணமாக பெரும்பாலான மீனவர்கள் கரைக்கு திரும்பினார்கள்.

வள்ளங்கள் மற்றும் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி இருந்தனர். கடல் சீற்றம் வருகிற 24-ந்தேதி வரை நீடிக்கும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள அனைத்து மீனவ கிராமங்களுக்கும் கடல் சீற்றம் அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த பங்கு தந்தைகள் மூலமாக மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top