ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கு; சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறிக்குறித்து ப.சிதம்பரத்தை கைது செய்தனர்

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில்  முதலீடு பெற அனுமதித்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பெரும் பரபரப்புக்கிடையே சிபிஐ. போலிசாரால் கைதுசெய்யப்பட்டு,  விசாரணைக்காக தனது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றது சிபிஐ.

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் இன்று இரவு 8.15 மணியளவில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் அபிஷேக் மனு சிங்வி, கபில் சிபில், சல்மான் குர்ஷித் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும், வழக்கறிஞர்களும் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அங்கு செய்தியாளர்களுக்கு சிதம்பரம் பேட்டியளித்தார். அப்போது சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகளும் அங்கு வந்தனர்.

தலைநகர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் நான் குற்றம் சாட்டப்படவில்லை. ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் என் மீதும்,  என் குடும்பத்தினர் மீதும் எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, ப.சிதம்பரம் தனது வீட்டுக்கு சென்றார். அவருடன் வக்கீல்கள் அபிஷேக் சிங்வி, கபில் சிபல் ஆகியோரும் சென்றனர்.அவரை பின் தொடர்ந்து சிபிஐ , அமலாக்கத்துறை அதிகாரிகளும் சென்றனர். சிறிது நேரத்தில் சிதம்பரம் டெல்லியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார்.

அவர் வீட்டுக்குள் சென்ற பிறகு வீட்டுக்கதவு மூடப்பட்டது. இதனிடையே சிபிஐ அதிகாரிகள் டெல்லி வீட்டுக்கு வந்தனர். ஆனால் காவலாளி அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறிக்குறித்து உள்ளே சென்றனர்.

அவர்களுடன் அமலாக்கத்துறை அதிகாரிகளும் உள்ளே சென்றனர். 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குடியிருப்பின் பின்புறம், முன்புறம் வழியாக உள்ளே நுழைந்தனர். பின்னர் அவரை கைது செய்வதற்காக கார் கொண்டு வரப்பட்டது. சிதம்பரம் வீட்டின் கேட் கதவு திறக்கப்பட்டு கார் உள்ளே கொண்டு வரப்பட்டது.

உடனடியாக அந்த பகுதியில் பெரிய அளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர். அங்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் திரண்டனர். இதனால் அந்தப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பெரும் பரபரப்புக்கிடையே சிபிஐ அதிகாரிகளால் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவாரா அல்லது இன்று இரவு முழுவதும் அமலாக்கத்துறை கஸ்டடியில் இருப்பாரா என்று அறிய முடியவில்லை  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top