எட்டு வழி சாலைக்கு எதிராக மனு; எடப்பாடி காரை விவசாயிகள் மறிக்க முயற்சி

சேலம்- சென்னை பசுமைச்சாலை என்று பெயரிட்ட எட்டு வழிச்சாலைக்கு எதிராக மனு கொடுக்க பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காரை விவசாயிகள் மறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட வாழப்பாடியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார். 

இந்தநிலையில், சேலம்- சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் சின்ன கவுண்டாபுரம், ராமலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண் விவசாயிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் திடீரென முதல்-அமைச்சரிடம் மனு கொடுப்பதற்காக வாழப்பாடிக்கு புறப்பட்டனர். 

மின்னாம்பள்ளி அருகே அவர்கள் வந்தபோது  அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் துணை சூப்பிரண்டு சூரியமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தடையை மீறி வாழப்பாடிக்கு வாகனங்களில் ஏறி சென்றனர். அப்போது வாழப்பாடி பஸ் நிலையம் அருகே அவர்களை போலீசார் மீண்டும் தடுத்து நிறுத்தினர். 

அப்போது போலீசாரிடம் அவர்கள் கூறுகையில், எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு நாங்கள் ஒருபோதும் எங்களுடைய விவசாய நிலத்தை கொடுக்க தயாராக இல்லை என்றும், இது சம்பந்தமாக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து மனு கொடுக்க வந்திருப்பதாகவும் கூறினர். 

ஆனால் அவர்களை விழா மேடைக்கு  செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கு மீண்டும் வாக்குவாதம்  ஏற்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமியிடம் மனு கொடுக்க ஏற்பாடு செய்கிறோம் என்று கூறி அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். 

இதற்கிடையே விழா முடிந்ததால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரில் சேலத்திற்கு புறப்பட  தயாரானார். அங்கு நின்ற போலீசாரும் சாலையில் நின்ற பொதுமக்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, போலீஸ் சூப்பிரண்டு தீபா காணிகேர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அங்கு வந்து, மனு கொடுக்க முயன்ற விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதை அவர்கள் கேட்காமல் முதல்-அமைச்சரிடம் மனு கொடுத்த பிறகே இங்கிருந்து கலைந்து செல்வோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். 

இதையடுத்து, அவர்கள் யாரும் முதல்-அமைச்சரை சந்திக்காத வகையில் கயிறு கட்டி போலீசார் தடுத்து சூழ்ந்து நின்றனர். ஆனால் சில பெண் விவசாயிகள் மட்டும் எட்டு  வழிச்சாலைக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு சாலையில் நின்று முதல்-அமைச்சரின் காரை வழிமறிக்க சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, அவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. விவசாயிகள் கூச்சல் எழுப்பிதுடன் ஆவேசம் அடைந்து கத்தியதால் அந்த பகுதி போர்க்களம் போல காட்சி அளித்தது. இதற்கிடையே முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கார் அங்கிருந்து சேலத்திற்கு  புறப்பட்டு சென்றது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ஒவ்வொரு மேடையிலும் நான் விவசாயி என்று முதல்வர் கூறுகிறார். ஆனால் எட்டுவழி சாலை என்பது விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் உலை வைக்கும் திட்டமாக உள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்க எங்களுக்க அனுமதியில்லை. முதல்வரை சந்திக்க விடாமல் போலீசார் திட்டமிட்டு எங்களை அலை கழித்தனர். எங்களையும், எங்களது கோரிக்கையையும் ஒரு பொருட்டாகவே முதல்வர் எடுத்து கொள்ளவில்லை. இது வேதனையாக உள்ளது. எங்களது குறைகளை கேட்காத முதல்வர் மீது கோர்ட்டில் புகார் தெரிவிப்போம். உயிர் இருக்கும் வரை தொடர்ந்து போராடுவோம். என்று  அவர்கள் கூறினார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top