முன்னாள் உள்துறை மந்திரி ப.சிதம்பரம் முன் ஜாமீன் மனுவை நாளை மறுநாள் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்

பல திருப்பங்களுக்கு இடையில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை வெள்ளிக்கிழமை விசாரிக்க உள்ளதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம், 2007-ம் ஆண்டு, மத்திய நிதி மந்திரி பதவி வகித்தார். அப்போது அவர், மும்பையை சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோரின் ஐ.என்.எக்ஸ். மீடியா தொலைக்காட்சி நிறுவனத்துக்கு, விதிமுறைகளை மீறி ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி திரட்டுவதற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெற்றுத் தந்தார், இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவினார். இதற்காக அவருக்கு சொந்தமான நிறுவனத்துக்கு லஞ்சம் தரப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சி.பி.ஐ. ஒரு குற்ற வழக்கும், சட்டவிரோத பண பரிமாற்ற பிரச்சனையில் அமலாக்கப் பிரிவு இயக்குனரகம் ஒரு வழக்கும் தொடுத்து அவை டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட் மறுத்துவிட்டது.

இதையடுத்து, டெல்லி ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து ப.சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் அவசர வழக்காக எடுக்க வேண்டும் என மேல் முறையீட்டு மனுவை நேற்று தாக்கல் செய்தார்.

இதற்கிடையே, அவரது மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் இன்று தெரிவித்தது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, அயோத்தி வழக்கை விசாரித்து வருவதால் ப.சிதம்பரம் மனுவை அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்டது. 

எனவே, இன்று பிற்பகல் மீண்டும் நீதிபதி என்.வி.ரமணாவிடம் ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் முறையிட்டனர். ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்று, இடைக்கால நிவாரணம் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். ஆனால் அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும், இடைக்கால நிவாரணம் எதுவும் தற்போதைக்கு வழங்க முடியாது என்றும் நீதிபதி ரமணா கூறிவிட்டார்.

“உங்கள் வழக்கை இன்றைய விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில் எப்படி விசாரிக்க முடியும்? உங்கள் மேல்முறையீட்டு மனுவில் பிழைகள் உள்ளன. அந்த பிழைகளை சரி செய்து புதிய மனுவை தாக்கல் செய்யுங்கள். அந்த மனு பட்டியலிடப்பட்டு அதன்பிறகு விசாரணை நடத்தப்படும்” என்று நீதிபதி ரமணா தெரிவித்தார்.பிறகு , வழக்கை விசாரிக்க மறுத்த நீதிபதி ரமணா, இந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு அனுப்பி வைத்தார். 

இவ்வாறு ப.சிதம்பரத்தின் வழக்கறிஞர்களின் கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு, விசாரணை தாமதம் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது.  அயோத்தி வழக்கு விசாரணை முடிந்தபிறகு, மீண்டும் தலைமை நீதிபதியிடம் முறையிட்டார்கள்

இந்நிலையில்,தலைமை நீதிபதி  ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீனுக்கான மேல் முறையீட்டு மனுவை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுப்பதாக சொல்லியிருக்கிறார்

இதற்கிடையில் சி.பி.ஐயும் ,அமலாக்கதுறையும்  ஐந்து முறை ப சிதம்பரம் வீட்டிற்கு போனது.வீட்டில் ப சிதம்பரம் இல்லை என்று தெரிந்ததும் அவரது வீட்டில் சி.பி.ஐ மற்றும் அமலாக்கதுறை அலுவலகத்தில் ஆஜர் ஆகும்படி போலீசார்  சம்மன் ஒட்டி விட்டு வந்தனர்.  

 டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ப.சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ள  மனுவில் “நான் சட்டத்தில் இருந்து தப்பி ஓடி ஒளிய அவசியம் இல்லை. முதல் தகவல் அறிக்கையில் எனது பெயர் குறிப்பிடாத நிலையில் முன் ஜாமீன் மறுத்தது ஏன்?

நான் விசாரணைக்காக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை முன்பு எந்த சூழ்நிலையிலும் ஆஜராகாமல் இருந்தது இல்லை. தப்பிச் செல்லவோ, சாட்சிகளை கலைக்க முயன்றதாகவோ என் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை.

எம்.பி.யாக உள்ள என் மீது இதற்கு முன்பு எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இருந்ததும் இல்லை” என்று .ப.சிதம்பரம் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது

இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மோடியின் அரசு அமலாக்கத்துறை, சிபிஐ, மற்றும் முதுகெலும்பு இல்லாத ஊடகத்தின் பிரிவுகளின் துணையோடு ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க பயன்படுத்துகிறது. இப்படி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக  ப.சிதம்பரத்திற்கு ஆதரவாக பதிவிட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி, ‘எம்.பி,  நிதி மந்திரி, உள்துறை மந்திரியாக நாட்டிற்கு பல ஆண்டுகள் விசுவாசத்துடன சேவை செய்தவர் ப.சிதம்பரம். மத்திய அரசின் தோல்விகளை ப.சிதம்பரம் அச்சமின்றி உண்மையுடன் பேசி வருகிறார். 

அவரை வேட்டையாடத் துடிப்பது வெட்கக்கேடு. எந்த சூழ்நிலையிலும் ப.சிதம்பரத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவாக இருக்கும்.  உண்மையை வெளிப்படுத்த தொடர்ந்து போராடுவோம். ப.சிதம்பரத்தை ஆதரிப்பதால் என்ன விளைவுகள் ஏற்பட்டாலும் அதனை சந்திக்க தயார்’ என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top