நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரம் தள்ளிவைப்பு ;மதுரையில் சிகிச்சை பெற்ற வைகோ சென்னை திரும்பினார்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தேனி மாவட்டம் பொட்டிப்புரத்தில் அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (20-ந் தேதி) முதல் 3 நாட்கள் விழிப்புணர்வு பிரசார பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தார்.

அதற்காக நேற்று மதுரை வந்த அவர் தபால் தந்தி நகரில் உள்ள வீட்டில் தங்கினார். அப்போது திடீரென வைகோவுக்கு உடல்சோர்வு ஏற்பட்டது. டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வைகோ அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் குறைந்த ரத்த அழுத்தம் இருப்பதாகவும், சில மணி நேரம் மருத்துவமனையில் தங்கி ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் கூறினர். தொடர்ந்து அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலையை டாக்டர்கள் அவ்வப்போது பரிசோதித்தனர்.

வைகோ சிகிச்சை பெற்ற மருத்துவமனை முன்பு ம.தி.மு.க.வினர் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வைகோ உடல்நிலை இன்று காலை சீராக காணப்பட்டது. இதனால் மருத்துவமனையில் தங்கி இருந்த வைகோ 10 மணி அளவில் டிஸ்சார்ஜ் ஆனார். பின்னர் விமான நிலையம் சென்ற அவர் சென்னை புறப்பட்டு சென்றார்.

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நாளை (20-ந் தேதி) தேனியில் நடைபெறு வதாக இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரத்தில் வைகோ பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த விழிப்புணர்வு பிரசார பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ம.தி.மு.க. தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top