தென் மேற்கு பருவமழை; தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்து மக்களை குளிர்வித்தது

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவிலிருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.தென் மேற்கு பருவ மழை தமிழ்நாடு ,கேரளா,கர்நாடகம் பகுதிகளில் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகமாக பெய்து வருகிறது.நீலகிரியில் மழை தொடர்ந்து பெய்ததால் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது

இந்நிலையில் நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ‘குளத்துக்குள் அத்திவரதர் சிலை வைத்தவுடன் கனமழை பெய்யும் என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியில் உள்ளது’ என்று கருத்து தெரிவித்தார்.இது மக்கள் மனதில் அறிவியலுக்கு எதிரான உணர்வை தூண்டுவதாக  இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விட்டார்கள் நல்லவேளை அத்திவரதர் குளத்திற்குள் வைப்பதற்கு முன்பே மழை பொழிந்து விட்டதால் அந்த நம்பிக்கை அரசியல் மக்களிடம் எடுபடாமல் போய்விட்டது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள் .

தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களில் இன்னும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்படி, சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது. இதேபோல், செங்கல்பட்டிலும் விடிய விடிய கனமழை பெய்தது.  கூடுவாஞ்சேரி, வண்டலூர், உள்ளிட்ட பல இடங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

சென்னையில் கிண்டி , அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல்  பலத்த மழை பெய்து வருகிறது. போரூர், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. 

கும்பகோணத்தில் 5 மணி நேரத்துக்கும் மேலாக கன மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதியில் கடும் வெயில் வாட்டிய நிலையில், மாலை முதல் கன மழை பெய்தது.  இதன் காரணமாக பூமி குளிர்ந்து, குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காவிரியில் தண்ணீர் திறந்து விட்ட நிலையில் இந்த மழை பெய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரம்பலூர் நகர் மற்றும் புறநகர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் விவசாயிகள் உள்ளிட்ட பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.பெரம்பலூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளான பாடாலூர், வேப்பந்தட்டை, குன்னம், வேப்பூர், வாலிகண்டபுரம், மங்கலமேடு உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாலை 6 மணி முதல் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.  மழையின் காரணமாக கிணறு,  குளம், ஏரி, கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் தேங்க துவங்கியுள்ளதால்   பொது மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல்  மாவட்டத்தில்,இரவு முழுவதும் சாரல் மலை பெய்து வருகிறது. நேற்று  வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருந்தது.இந்நிலையில் மாலையில் மேகங்கள் திரண்டு நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்  இடி மின்னல் காற்றுடன் கன மழை பெய்தது.இதனால் வெப்பம் குறைந்து குளிர்ந்த சீதோசன நிலை ஏற்பட்டது. 

வேலூரில் தொடர் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் கனமழையும் சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இரவு தொடங்கிய விடிய விடிய கொட்டியது. இதனால், நகரின் முக்கிய  சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

இந்த நிலையில், தொடர் மழையால் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் அறிவித்துள்ளார். 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top