அத்திவரதரை வைக்கும் நீரை ஆய்வு செய்ய வேண்டும் – வைத்ததும் மழை பெய்யும் ஐகோர்ட் நம்பிக்கை!

தமிழக மக்கள் அன்றாட பயன்பாட்டுக்கே தண்ணீருக்கு திண்டாடி வருகிற நிலையில், சுத்தமான குடிநீர் என்பதே கனவாகி போனது. மாசுபட்ட குடிநீரை குடிப்பதால் பல நோய்களுக்கு ஆளாவது இயல்பாகி விட்டது.அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீர் இல்லாமல் தொற்று வியாதிகள் பரவலாகி வருவது தெரிந்ததே! அரசாங்கம் இதுவரை இந்த நிலையை போக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆனால் அத்திவரதர் மரச் சிலையை தண்ணீருக்குள் வைக்க தண்ணீர் சுத்தமாக உள்ளதா என ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு விட்டிருக்கிறது.இது பல கேள்விகளை மக்கள் மனதில் எழுப்பி இருக்கிறது  

அத்திவரதர் சிலை வைக்கப்பட உள்ள அனந்தசரஸ் குளத்தில் தண்ணீர் நிரப்பப்படும் முன் அந்த நீரை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபடுகிறது ஆகையால் அணுக்கழிவை இங்கு வைக்காதீர்கள் என்றும்,அதிக மாசை வெளியிடும் ஸ்டெர்லைட் ஆலையை மூடச்சொல்லியும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தால் உடனடியாக தீர்ப்பை சொல்லாமல் இன்னும் இழுத்தடிக்கும் இந்த அரசு நிறுவனங்கள் அத்திவரதருக்கு உடனடியாக தீர்ப்பை சொல்கிறது.  

சென்னை ஐகோர்ட்டில், அசோகன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலை 40 ஆண்டுகளுக்கு பின்னர் எடுத்து, பொதுமக்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. சிலையை மீண்டும் குளத்துக்குள் வைப்பதற்குள், அனந்தசரஸ் குளத்தை தூர்வார அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆதிகேசவலு விசாரித்தார். அப்போது, அரசு தரப்பில் ‘குளத்தை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுத்தம் செய்ய தேவையில்லை.குளத்திற்குள் அத்திவரதர் இருப்பதால் ஒலிமாசுவை தவிர்க்க நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதில்லை,   இயற்கையாகவே அந்த குளத்தில் இருக்கும் மீன்கள் சுத்தம் செய்து விடுகிறது’ என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இதை நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஏற்றுக்கொண்டார்

இதையடுத்து அனந்தசரஸ் குளத்தை எதிர்காலத்தில் சுத்தமாக வைக்க என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்? என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்தறை சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘மீன்களுக்கு பொதுமக்கள் பொரி போடுவதால் தான், குளத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் சேருகிறது.

எனவே, மீன்களுக்கு பொதுமக்கள் பொரி போடுவதற்கு தடை விதிக்கப்படும். 24 மணி நேரமும் குளத்துக்கு காவலாளிகள் நியமிக்கப்பட உள்ளனர். அவ்வப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், குளத்தை ஆய்வு செய்வார்கள். குளத்தின் மண் எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த ஆய்வு அறிக்கை கிடைப்பதற்கு 4 நாட்கள் ஆகும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வக்கீல் அப்துல் சலீம், ‘குளத்தில் நிரப்பப்போகும் தண்ணீரின் தன்மை குறித்து மாதிரி சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கையை வருகிற 19-ந்தேதி தாக்கல் செய்கிறோம் என்று கூறினார்.

இதை நீதிபதி ஏற்க மறுத்து விட்டார். 17-ந்தேதி குளத்துக்குள் சிலை வைக்கப்பட உள்ளது. அப்படி இருக்கும்போது நீரின் ஆய்வு அறிக்கை 19-ந்தேதி தாக்கல் செய்வதால் என்ன பயன் ஏற்படப்போகிறது? இதுவரை சேகரித்த ஆய்வு அறிக்கையை நாளை (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யுங்கள்’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.பிளாஸ்டிக் தடை செய்திருக்கிற நிலையில் எப்படி குளத்து மீன்களுக்கு பொரி போடுபவர்கள் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவார்கள் மற்றும் மீன்களுக்கு உணவான பொரி போடுவதை கோர்ட் எப்படி தடுத்து நிறுத்த முடியும்?குளத்தை சுத்தப்படுத்தும்  மீன்களை பாதுகாத்தால்தானே அத்திவரதரையே பாதுகாக்க முடியும் இது குறித்து கோர்ட் எந்த கேள்வியும் கேட்காதது பக்தர்களுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.  

அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு பிளடர், ‘சுத்தமான காவிரி ஆற்று நீரை கொண்டு குளத்தை நிரப்பலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் பரிந்துரை செய்துள்ளது. கோவிலில் உள்ள ஆழ்துளை கிணற்று நீரை கொண்டோ, கோவிலில் உள்ள மற்றொரு குளமான பொற்றாமரை குளத்து நீரை கொண்டோ அனந்தசரஸ் குளத்தை நிரப்ப முடியும்’ என்றார்.

அதற்கு எந்த நீராக இருந்தாலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வுக்குட்படுத்த வேண்டும். எனவே, இன்று முதல் தினசரி அடிப்படையில் புகைப்படம் எடுத்து கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.

அப்போது குறுக்கிட்ட அரசு பிளடர், ‘மழை பெய்துவிட்டால் என்ன செய்வது?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு நீதிபதி, ‘மழை நீரை விட சுத்தமான நீர் வேறு எதுவும் உள்ளதா? அப்படி மழை பெய்தால், அதுவே அனந்தசரஸ் குளத்துக்கு சிறந்த நீராக அமையும்’ என்றார். மேலும், ‘குளத்துக்குள் அத்திவரதர் சிலை வைத்தவுடன் கனமழை பெய்யும் என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியில் உள்ளது’ என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.இது மக்கள் மனதில் அறிவியலுக்கு எதிரான உணர்வை தூண்டுவதாக  இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.

தற்போது இந்தியாவின் மேற்கு கரையோரப்பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது,பல இடங்களில் வெள்ளப்பெருக்கு நடந்து கொண்டிருக்கிறது கேரளாவில் பெரும் மழை பெய்து கொண்டிருக்கிறது, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கன மழை பெய்து வருகிற நிலையில் அடுத்து சமவெளிப் பகுதிகளில் தான் மழை பொழியும்.

2015 காலப்பகுதிகளில் இவ்வாறு பெய்த மழையினால் பெரும் வெள்ளப்பெருக்கெடுத்து பெரும் இன்னலை சந்தித்தது சென்னை. இப்படியிருக்கையில் அத்திவரதரை குளத்தில் வைத்ததும் மழை பெய்யும் என்று ஐகோர்ட் நம்பிக்கை கொள்வது எந்த வகையில் நியாயம்? அரசியல் சட்ட அடிப்படையில் மக்களுக்கு அறிவியல் கருத்துக்களை பரப்பவேண்டுமே தவிர அறிவியலுக்கு எதிரான கருத்தை ஐகோர்ட்டே பரப்புவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவிக்கிறார்கள்    


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top