கர்நாடகம் ,கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரம்: மேட்டூர் உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. 

கர்நாடக அணைகளில் இருந்து நொடிக்கு ஒன்றரை லட்சம் கன அடி வீதம் காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 3 அடி உயர்ந்தது.

இதன்காரணமாக கர்நாடகாவில் உள்ள முக்கிய நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 84 அடி முழு கொள்ளளவு கொண்ட கபினி அணை, 82 அடி நிரம்பியது. நேற்று வரை கபினி அணைக்கு நொடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருந்த மைசூர் மாவட்டத்தில் உள்ள 84 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் ஒரு லட்சத்து 25,000 கன அடி நீரும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் ஒகேனக்கல்லில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 40 ஆயிரம் கன அடியாக உள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியான பண்ணவாடியில் வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதுபோல் தாரகா தடுப்பணையில் வினாடிக்கு 15,000 கனஅடியும், நாகு தடுப்பணையில் 10,000 கனஅடியும் நீர் திறக்கப்பட்டு உள்ளது. 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 54 அடியாக இருந்த நிலையில், ஒரேநாளில் 3 அடி உயர்ந்து தற்போது 57.16 அடியாக உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து வரும் நீர் இதேஅளவில் தொடரும் பட்சத்தில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று மாண்டியாவில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்து 25,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் கூடுதலாக நீர் வந்து கொண்டிருப்பதால் எந்த நேரத்திலும் அணை நிரம்பி கூடுதல் நீர் திறக்கப்படும். எனவே கரையோர மக்கள் கால்நடைகளுடன் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கர்நாடகா அணைகளில் கூடுதல் நீர் திறப்பால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று மாலையில் ஒரு லட்சம் கன அடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் காவிரி கரையோரத்தில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

பவானிசாகர் அணை நீர்மட்டம் – 87.9 அடி, நீர்இருப்பு – 19.7 டிஎம்சி, நீர்வரத்து – 36,038 கனஅடி, வெளியேற்றம் – 205 கனஅடி ஆகும்.

நொய்யல் ஆற்றில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு – கரையோர பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பொள்ளாச்சி ஆழியார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்து உள்ளது. 

தேனி சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு, 3-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கனமழை காரணமாக  ஒரே நாளில் பாபநாசம் அணை 5.5 அடியும், சேர்வலாறு அணை 5.7 அடியும் உயர்ந்து உள்ளது.

மேட்டுப்பாளையம் பல்லூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

நீர்வரத்து அதிகரிப்பால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 3 அடி அதிகரித்து 126 அடியானது. அணையில் நீர் இருப்பு 3,963 மில்லியன் கன அடியாக உள்ளது. 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top