காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து : ஜனநாயக படுகொலை வைகோ ஆவேசம்! எதிர்க்கட்சிகள் அமளி!

ஜம்மு காஷ்மீரில் கடந்த இரு தினங்களாக ஒரு அசாதாரண நிலையை மத்தியில் ஆளும் பாஜக அரசு உருவாக்கி வைத்திருந்தது.

திடீரென அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டது.  ஜம்மு-காஷ்மீரில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் வெளியேற்றப்பட்டனர். கல்லூரிகளில் இருந்த மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதையடுத்து அம்மாநிலத்தில் படை பலம் அதிகரிக்கப்பட்டது.ஒரு எமர்ஜன்சியை காஸ்மீர் மக்கள் கடந்த இரு தினங்களாக எதிர்கொண்டு வருகிறார்கள்  

இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஆலோசனை மேற்கொண்டார். நாடாளுமன்ற கட்டிடத்தில் நடந்த இந்த ஆலோசனையில், உள்துறை செயலர் ராஜிவ் கவ்பா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவுத்துறை தலைவர் அரவிந்த் குமார், ரா அமைப்பின் தலைவர் சமந்த் கோயல் ஆகியோர் பங்கேற்றனர்.

இன்று காலை 9.30 மணிக்கு ஜம்மு-காஷ்மீரில் நிலவிவரும் பதற்றமான சூழல் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.  பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட இதர அமைச்சர்களும் பங்கேற்றனர்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே பாராளுமன்ற இரு அவைகளும் இன்று கூடியது. 

இதில் பேசிய மத்திய உள் துறை மந்திரி அமித்ஷா, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டபிரிவின் 370 வது சட்டபிரிவு ரத்து, காஷ்மீருக்கான 35 ஏ சட்ட பிரிவு ரத்து செய்யப்படுகிறது.  சிறப்பு பிரிவுகளை ரத்து செய்வது குறித்து மத்திய அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்.

இதற்கான குடியரசு தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டு உள்ளது என்றும்  அவர் கூறினார்.  சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கான அறிவிப்பாணையையும் மத்திய அரசு வெளியிட்டது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது என மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டால் காஷ்மீரின் எல்லைகளை மத்திய அரசால் மாற்றி அமைக்க முடியும். சிறப்பு அந்தஸ்தின் மூலம் காஷ்மீரின் நிரந்தர குடிமக்களை அம்மாநில சட்டப்பேரவை மட்டுமே தீர்மானிக்க முடியும்.

குடியரசு தலைவர் கையெழுத்துடன் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கும் அறிவிப்பாணை வெளியீடு. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டால் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் அனைத்து சட்டங்களும் காஷ்மீருக்கும் இனி பொருந்தும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்தார்.

காஷ்மீர்  சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு மாநிலங்களவையில் மதிமுக தலைவரும் எம்பி யுமான  வைகோ, திமுக எம்.பி திருச்சி சிவா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டப்பிரிவு 370 ரத்து மற்றும் காஷ்மீர் பிரிக்கப்பட்டது, ஜனநாயக படுகொலை என வைகோ ஆவேசமாக பேசினார்.

வைகோ பேசும்போது,  எமெர்ஜென்சி மீண்டும் வந்திருக்கிறது என கூறினார். இதற்கு வெங்கையா நாயுடு “எமெர்ஜென்சி இல்லை அர்ஜென்சி (Urgency)”  என கூறினார்.

குலாம் நபி ஆசாத்:  2-3 எம்.பி.க்களின் செயலை நான் கடுமையாக கண்டிக்கிறேன். (அரசியலமைப்பு நகலை  கிழிக்க முயன்ற மெகபூபா முப்தி கட்சி எம்.பி.க்கள்  மிர் ஃபயாஸ் மற்றும் நஜீர் அகமது லாவே). இந்திய அரசியலமைப்பிற்கு நாங்கள் துணை நிற்கிறோம். ஆனால் இன்று பாஜக அரசியலமைப்பை கொலை செய்துள்ளது என கூறினார்

இந்த நிலையில், மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த மீர் பயஸ் மற்றும் நசீர் அகமது லாவே ஆகிய 2 எம்.பி.க்கள் அவையில் அரசியலமைப்பினை கிழிக்க முயன்றனர்.  இதனால் அவர்கள் இருவரையும் அவையில் இருந்து வெளியேறும்படி சபாநாயகர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார். இருஅவைகளும் இன்று பெரும் அமளியாக இருந்தது. சமூகவலைத்தளத்தில் இது குறித்து பலர் இன்று கருப்பு நாள் என பேசிவருகிறார்கள்  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top