ஜம்மு காஷ்மீரில் இராணுவம் குவிப்பு;காஷ்மீரை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்

ஜம்மு காஷ்மீரில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அமர்நாத் யாத்திரையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அங்கு வசிக்கும் மக்கள் மத்தியில் பதற்றம் நிலவுகிறது. 

சட்டப்பிரிவு ரத்து, மாநிலம் பிரிக்கப்பட இருக்கிறது என பல்வேறு யூகங்கள் கொடி கட்டி பறக்கிறது. ஆனால்,  ஜம்மு காஷ்மீர் ஆளுநர் இதனை மறுத்து வருகிறார்.

காஷ்மீரை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவுகின்றன.

ஜம்மு காஷ்மீரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால்,  அம்மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படலாம் என வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவின. ஆனால், மத்திய அரசு இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்தது. தரை, வான் படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, அமர்நாத் யாத்திரை நேற்று திடீரென நிறுத்தப்பட்ட நிலையில் காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், காஷ்மீரை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. ஜம்முவை தனி மாநிலமாகவும், லடாக், காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்க திட்டம் எனவும் இதற்கான அறிவிப்பை சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி அறிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. 

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய கூடாது என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் மத்திய அரசு இந்த புதிய  திட்டத்தை முன்வைத்துள்ளதாக தெரிகிறது.

இந்த சூழலில், ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்கை, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உமர் அப்துல்லா கூறியதாவது:

ஜம்மு காஷ்மீரில் என்ன நடக்கப்போகிறது என்பதை யாரும் சொல்ல மறுக்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் மக்களின் பதற்றத்தை போக்கும் வகையில் மத்திய அரசு  அறிவிப்பை வெளியிட வேண்டும்.  காஷ்மீரில் ஏதோ நடப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், என்ன நடக்கிறது என்பது அதிகாரிகளுக்கும் தெரியவில்லை.

35 ஏ, 370 சட்டம் ரத்து செய்யப்பட இருப்பதாகவும், மாநிலம் மூன்றாக பிரிக்கப்பட இருப்பதாகவும் வதந்திகள் பரவுகின்றன என நாங்கள் ஆளுநரிடம் தெரிவித்தோம். எந்த ஒரு அறிவிப்புக்கும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று ஆளுநர் எங்களுக்கு உறுதி அளித்துள்ளார்.  திங்கள் கிழமை பாராளுமன்றம் கூடும் போது, அமர்நாத் யாத்திரை ரத்து மற்றும் சுற்றுலாப்பயணிகளை வெளியேற்றம் செய்யும் அளவுக்கு என்ன தேவை எழுந்தது என்பது பற்றி மத்திய அரசு அறிக்கை அளிக்க வேண்டும். மக்கள் அச்சப்பட தேவையில்லை என பாராளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

யாத்ரீகர்கள் உடனடியாக காஷ்மீரை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களில் டிக்கெட் கட்டணம் வெகுவாக உயர்ந்துள்ளது.

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதனை பயன்படுத்தி விமான நிறுவனங்கள் விமான டிக்கெட் விலையை கிடுகிடுவென உயர்த்தியுள்ளன. ஸ்ரீநகரில் இருந்து டெல்லி செல்லும்  விமான டிக்கெட்டின் விலை ரூபாய் 10000 முதல் 22000 வரை வசூலிக்கப்படுகின்றது. வழக்கமான கட்டணத்தை விட இது ரூ.3000 அதிகமாகும். 

ஸ்ரீநகரிலிருந்து ஜம்மு செல்வதற்கான கட்டணம் ரூபாய் 16000 வரை வசூலிக்கப்படுகின்றது. இதேபோன்று அமிர்தசரஸ், சண்டிகார், ஜெய்ப்பூர் செல்வதற்கான கட்டணங்களும் வெகுவாக உயர்ந்துள்ளன. இணையதளங்களில், அடுத்து வரும் இரண்டு மூன்று  நாட்களுக்கு ஸ்ரீநகரிலிருந்து செல்லும் அனைத்து விமானங்களிலும் விமான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. 

இதுகுறித்து பயணி ஒருவர் கூறுகையில், ‘‘மக்கள் அனைவரும் இங்கிருந்து வெளியேற வேண்டும் என்ற பதற்றத்தில் உள்ளனர். தேவையற்ற பீதியை மக்களுக்கு ஏன் பாஜக அரசு  கொடுத்துக்கொண்டிருக்கிறது தெரியவில்லை ஸ்ரீநகரிலிருந்து டெல்லி செல்ல 12000 ரூபாய் கட்டணம் செலுத்தி செல்கிறோம்’’ என்றார். 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top