மழை குறைந்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியை தொட்டது

 

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.


கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜாசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 6 ஆயிரத்து 512 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து காவிரியில் 9 ஆயிரத்து 852 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கபினி அணைக்கு 2 ஆயிரத்து 349 கன அடி தண்ணீர் வரும் நிலையில் அணையில் இருந்து 642 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து 11 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது தண்ணீர் திறப்பு 10 ஆயிரத்து 494 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்குள்ள அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கலுக்கு வருகிறது.

ஒகேனக்கலில் தற்போது 10 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வருகிறது. இதனால் அங்குள்ள மெயின் அருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். 10 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வருவதால் ஒகேனக்கல் காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று 9 ஆயிரத்து 935 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 10 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 23-ந் தேதி 39.13 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து நேற்று 48.92 அடியாக இருந்தது. இன்று நீர்மட்டம் ஒரு அடிக்கு மேல் உயர்ந்து 50.15 அடியாக உயர்ந்தது. இதனால் கடந்த 10 நாட்களில் 11 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


ஆடிப்பெருக்கு விழா நாளை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மேட்டூர் காவிரியில் புனித நீராட சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல் என மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் என ஒரு லட்சத்திற்கு மேல் வருவார்கள். அவர்கள் அங்குள்ள காவிரியில் நீராடி மேட்டூர் அணைக்கட்டு முனியப்பனை தரிசித்து அணை பூங்காவில் அமர்ந்து சாப்பிடுவார்கள்.


இதையொட்டி மேட்டூர் வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான தற்காலிக உடை மாற்றும் அறை, கழிவறைகள், மின் விளக்குகள் மற்றும் நெரிசலை தவிர்க்க தடுப்புகள் அமைத்தல், போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

அப்போது பக்தர்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டது. படித்துறைகளில் பெண்களுக்கு உடை மாற்றும் தற்காலிக அறைகள் அமைக்கும் பணி தொடங்கியது.

தீயணைப்பு வண்டிகள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவ பணியாளர்களை நிறுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. திருடர்களை கண்காணிக்க கண்காணிப்பு கேமிராக்களும், தற்காலிக போலீஸ் உதவி மையமும் அமைக்க முடிவு செய்யப்பட்டன.

கடந்த ஆண்டு மே மாதம் 14-ந் தேதியே மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியை தாண்டியது. இந்தாண்டு தற்போது தான் மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியை தாண்டி உள்ளது.


கடந்தாண்டு மேட்டூர் அணை 4 முறை நிரம்பியதால் இதே நாளில் 18 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பக்தர்கள் உற்சாகமாக நீராடினர்.


ஆனால் இந்தாண்டு தற்போது வரை அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் மட்டுமே காவிரியில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய காவிரி கரையோர பகுதிகளில் பக்தர்கள் நீராட போதுமான தண்ணீர் இல்லாததால் கடும் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top