கரூர் இரட்டை கொலை- கொலையாளிக்கு உடந்தையாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

கரூரில் குளம் ஆக்கிரமிப்பை தடுத்த தந்தை மற்றும் மகன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிக்கு உடந்தையாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா முதலைப்பட்டியை சேர்ந்தவர் வீரமலை (வயது 70), சமூக ஆர்வலர். இவரது மகன் நல்லதம்பி (45), விவசாயி. கடந்த 29-ந்தேதி வீரமலை , அங்குள்ள அவரது தோட்டத்தில் இருந்தார். அப்போது அங்கு அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த கும்பல், வீரமலையை சரமாரி வெட்டிக் கொன்றது.


பின்னர் அப்பகுதி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நல்ல தம்பியையும் வழிமறித்து நடுரோட்டில் சரமாரி வெட்டிக்கொன்றனர். பட்டப்பகலில் தந்தை-மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொலை தொடர்பாக குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.அப்போது முதலைப்பட்டியில் 39 ஏக்கர் ஏரியை 70-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்து பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்துள்ளதும், அந்த ஏரியை மீட்கக்கோரி வீரமலை மற்றும் நல்லதம்பி ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் பொது நல மனுத்தாக்கல் செய்தனர்.மனுவை விசாரித்த நீதிபதிகள், ஏரியை அளக்க உத்தரவிட்டனர். அதன்படி ஏரியை அதிகாரிகள் அளவீடு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள் தந்தை-மகன் இருவரையும் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து இந்த கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வந்தநிலையில் , கொலை தொடர்பாக முதலைப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் என்ற சவுந்தர்ராஜன் (36), பிரபாகரன் (27), கவியரசன் (34), சசிகுமார் (34), ஸ்டாலின் (22), சண்முகம் (34) ஆகியோர் மதுரை 6-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் கடந்த 31-ந்தேதி சரண் அடைந்தனர். நேற்று திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் முதலைப்பட்டியை சேர்ந்த பிரவீன்குமார் (23) என்பவர் சரணடைந்தார்.

இந்தநிலையில் இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நேற்று குளித்தலைக்கு சென்று விசாரணை நடத்தினார். தந்தை-மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதனிடையே ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பாக வீரமலை தொடர்ந்த வழக்கில் அவருக்கு வெற்றி கிடைத்ததால் எதிராளிகள் அவருக்கும், அவரது மகனுக்கும் கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். இது பற்றி அவர் குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரிடம் புகார் தெரிவித்துள்ளார். புகாரில் வீரமலை, தனது குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் இன்ஸ்பெக்ட ர் பாஸ்கர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.மேலும் நேற்று கொலை தொடர்பாக திருச்சி கோர்ட்டில் சரணடைய பிரவீன் குமார் மற்றும் ஒருவர் வந்தனர். இதில் பிரவீன்குமார் மட்டும் சரணடைந்தார். மற்றொருவர் தப்பியோடி விட்டார். அவர் தப்பிக்க இன்ஸ்பெக்டர் பாஸ்கர்தான் காரணம் என்று தகவல்கள் வெளியாகியது.மேலும் கொலை தொடர்பாக பாஸ்கர் உரிய விசாரணை நடத்தாமல் இருந்து வந்ததாகவும், குற்றவாளிகளை கைது செய்ய எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்றும் தெரிகிறது. இதேபோன்று பாஸ்கர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டன.இது தொடர்பாக விசாரணை நடத்திய திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பாஸ்கரை சஸ்பெண்டு செய்து இன்று அதிரடியாக உத்தரவிட்டார். இது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் இந்த இரட்டைக் கொலை தொடர்பான வழக்கு புதிய இன்ஸ்பெக்டர் ஒருவரை நியமனம் செய்து அவரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top