ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பதில் தமிழக அரசு வெவ்வேறு நிலைப்பாட்டை எடுப்பது ஏன்? ஐகோர்ட்டு கேள்வி

ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு வெவ்வேறாக இருப்பது ஏன்? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம், இரணியன்அல்லி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில். இவர், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது தாயார் அமுதா, சென்னை ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், ‘எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகத்தில் ஆயிரக்கணக்கான தண்டனை கைதிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர். என்னுடைய மகன் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்தும், அவரை விடுதலை செய்யவில்லை.

இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், என்னுடைய கோரிக்கையை 6 வாரத்தில் பரிசீலிக்க உத்தரவிட்டனர். ஆனால், இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, இதற்கு காரணமாக அரசு அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல்குத்தூஸ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் சிறையில்தான் இருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், தர்மபுரி பஸ் தீ வைப்பு வழக்கில் கடும் தண்டனை பெற்றவர்களை தமிழக அரசு முன்கூட்டியே விடுதலை செய்துள்ளதே? ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் இயற்றியுள்ளதே? ஒவ்வொரு வழக்குக்கும் அரசு வெவ்வேறு நிலைப்பாட்டை எடுப்பது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், ‘10 ஆண்டுகள் நிறைவு செய்தவர்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசு முடிவெடுத்தால், அது அனைவருக்கும் சமமாகத்தானே இருக்க வேண்டும்?, அரசியல் அழுத்தம் காரணமாக இதுபோல முடிவுகள் எடுக்கப்படுகிறதா? மனுதாரரின் மகன் செந்தில் விவகாரத்தில் அரசு மாற்று நிலைப்பாடு எடுக்க காரணம் என்ன? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top