‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் தமிழக சட்டசபையில் நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்ப ஐகோர்ட்டு யோசனை

தமிழக சட்டசபையில் மீண்டும் நீட்’ தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் மீண்டும் மசோதாவை நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க தடை எதுவும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.

நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளித்து கடந்த 2017-ம் ஆண்டு தமிழக சட்டசபையில் இரு சட்டமசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற மத்திய அரசுக்கு மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

ஆனால், எந்த பதிலும் வரவில்லை என்பதால், தமிழ்நாடு மாணவர்கள், பெற்றோர் நலச்சங்கம், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, “இரு சட்ட மசோதாக்களையும் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந் தேதி ஜனாதிபதி நிராகரித்து விட்டார். இதையடுத்து இந்த சட்ட மசோதா ஆவணங்கள், 2017-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசும் ஒப்புகை அளித்துள்ளது” என்று மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த தகவல் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

தேர்தல் நேரத்திலும் இதை மக்களிடம் சொல்லாமல் மத்திய, மாநில அரசுகள் மறைத்து விட்டது  

இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “சட்ட மசோதாக்களை ஜனாதிபதி நிராகரித்தவுடன், அந்த சட்ட மசோதா ஆவணங்கள் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவற்றை செப்டம்பர் 25-ந் தேதி பெற்றுக்கொண்டோம் என்று தமிழக அரசும் ஒப்புகை வழங்கியுள்ளது” என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் விடுதலை, “மசோதாக்கள் ஏன் நிராகரிக்கப்பட்டது? என்ற காரணத்தை ஜனாதிபதி கூறவில்லை. அந்த காரணத்தை கூறுவது அரசியல் அமைப்புச்சட்டத்தின்படி ஜனாதிபதியின் கடமையாகும்” என்று வாதிட்டார்.

அதற்கு நீதிபதிகள், “மசோதா நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை மத்திய அரசிடம், தமிழக அரசு கேட்டுள்ள நிலையில், பொது நல வழக்கு மூலம் ஜனாதிபதியிடம் காரணங்களை ஐகோர்ட்டு கேட்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு மூத்த வக்கீல், “இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கைகோர்த்து செயல்படுகிறது. மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும், அந்த சட்ட மசோதாவை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்த தகவலை தமிழக அரசு ஐகோர்ட்டுக்கு ஏன் தெரிவிக்கவில்லை?, பொதுமக்களிடமும் ஏன் தகவல் தெரிவிக்கவில்லை?, மக்கள் பிரதிநிதிகளிடமும் ஏன் தெரிவிக்கவில்லை?, மசோதா திருப்பி வந்தது குறித்த தகவல் எங்களுக்கு தெரியாது என்று அமைச்சரோ, அரசு செயலாளரோ கூற முடியாது.

ஒரு முறை மசோதா நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டால், மீண்டும் சட்டசபையில் அந்த மசோதாவை நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க தமிழக அரசுக்கு தடை எதுவும் இல்லை. அரசு விரும்பினால், இப்போதுகூட இந்த இரு மசோதாக்களையும் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கலாம்” என்று கூறினர்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், இதுகுறித்து தமிழக அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாகவும், அதற்கு கால அவகாசம் வேண்டும் என்றும் கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் விசாரணையை வருகிற 13-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top