‘மாநில நதி நீர் நிர்வாகத்தை பறித்துக்கொண்ட மத்திய அரசு;கனவாகி போகும் காவேரி நீர் உரிமை!

பாராளுமன்றத்தில் பாஜக அரசு தொடர்ச்சியாக பல மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது.எந்த மசோதாக்கள் மீதும் நிறைவான பதிலை இதுவரை அரசு தந்ததில்லை. எதிர்கட்சிகளின் விவாதங்களை ஒரு பொருட்டாகவும் மதிப்பதில்லை.இந்த பாராளுமன்ற தொடர்தான் வரலாற்றில் அதிக மசோதாக்களை நிறைவேற்றிய தொடராக இருக்கும்.அவசரகதியில் விவாதங்களை பொருட்படுத்தாமல் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மக்கள் விரோதமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்நிலையில் மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் தகராறு (திருத்தம்) மசோதா, 2019 ஜூலை 25 ஆம் தேதி மக்களவையில் ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் சேகாவத் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் தகராறு சட்டம், 1956 ஐ திருத்துகிறது. இந்த சட்டம் மாநிலங்களுக்கு இடையேயான ஆறுகள் மற்றும் நதி, பள்ளத்தாக்குகளின் நீர் தொடர்பான சர்ச்சைகளை தீர்ப்பதற்கு வழங்குகிறது.

“மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் சிக்கலுக்கான ஆணைய திருத்த மசோதா’2019 (The Inter-State River Water Disputes (Amendment) Bill, 2019). இந்த மசோதாவின் தீமைகள்  குறித்து கொண்டல்சாமி அவர்களின் கட்டுரை எம் வாசகர்களுக்கு பகிர்ந்தளிக்கிறோம்.

தமிழ்ஸ்நவ்

25.07.19 அன்று மிக மோசமான ஒரு சட்டதிருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் மத்திய மோடி அரசு தாக்கல் செய்திருக்கிறது. அது மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் சிக்கலுக்கான ஆணைய திருத்த மசோதா’2019 (The Inter-State River Water Disputes (Amendment) Bill, 2019).

இந்த மசோதா மட்டும் நிறைவேறினால் காவிரி நீர் தமிழகத்திற்கு ஒருநாளும் கிடைக்காது. கிடைக்கவும் விடமாட்டார்கள். அதுபோக மாநில அரசுகள் இனி தண்ணிருக்கு மத்திய அரசிடம் மண்டியிட்டு தான் நிற்கவேண்டும் என்ற நிலைமை உருவாகும். மாநிலங்களிலிருக்கின்ற நதிகளின் நிர்வாகம் மத்திய அரசுக்கு போகும். ஏற்கனவே வரி உரிமை, கல்வி உரிமை, உணவு உரிமை, லைசன்ஸ் பெறும் உரிமை என்று ஒவ்வொன்றாக மாநில அரசிடமிருந்து மத்திய அரசு பிடுங்கிகொண்டது இப்போது நதியையும் பிடுங்க நினைக்கிறது.

இந்த மசோதாவிலுள்ள தீமைகள் சில..

1.இந்த ஆணையம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாளிலிருந்து அமைக்கப்பட்ட தீர்ப்பாயங்கள் அல்லது அதற்கு முன் அமைக்கப்பட்டு நடைமுறையிலுள்ள அனைத்து தீர்ப்பாயங்களும் உடனடியாக கலைக்கப்பட்டு இந்த ஒன்றை ஆணையத்தோடு இணைக்கப்படும்.

2.ஏற்கனவே ஆணையம் அமைக்கப்பட்டு தீர்ப்பும் கொடுத்து முடிக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் முடிவில் ஏதேனும் ஒரு மாநிலம் மத்திய அரசிடம் மேல் முறையீடு செய்தால், இந்த ஆணையம் உடனடியாக அதனை மறு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும்.

3.அப்படி மேல்முறையீடுக்கு ஆணையம் எடுத்துக்கொண்டால் ஆணையம் அதன்மீதான விசாரணையை ஒரு வருடத்திற்குள் முடித்து விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்க தவறும் பட்சத்தில் மேலும் ஆறுமாத காலம் நீடிப்பு கொடுக்கப்படும். அப்படியும் கொடுக்க வில்லையெனில் இந்த ஆணையம் கலைக்கப்பட்டு, புதிய ஆணையம் அமைக்கப்படும். அது மறுபடியும் முதலிருந்து புதிய உறுப்பினர்களை கொண்டு விசாரணையை தொடங்கும்.

4.இந்த ஆணையம் அறிக்கை கொடுத்த பின் மத்திய அரசு அதன்மீது மூன்று வருடங்களுக்குள் முடிவு எடுக்கவேண்டும். முடியவில்லையென்றால் மேலும் இரண்டு ஆண்டுகள் முடிவு எடுக்க நீடிக்கப்படும்.

5.இந்த ஆணையத்தின் அறிக்கையின் படி மத்திய அரசு அரசிதழில் அந்த தீர்ப்பை வெளியிடும். அப்படி வெளியீடும் தீர்ப்பில் சம்பந்தப்பட்ட மாநிலத்தில் யாருக்கேனும் ஏதேனும் ஒரு சந்தேகம் இருந்தால் அதனை மத்திய அரசிடம் கேட்கலாம். மத்திய அரசு அந்த சந்தேகத்தை 3மாதத்திற்குள் தீர்க்கலாம். ஒருவேளை முடியாத பட்சத்தில் மீண்டும் ஆணையத்திடமே இந்த முறைப்பாட்டை வைக்கலாம். இந்த ஆணையம் அதனை ஒரு வருடத்திற்குள் அந்த சந்தேகத்தை தீர்க்கவேண்டும்.

6.மத்திய அரசு அரசிதழில் தீர்ப்பை வெளியிட்டபின் மாநில நதிகள் குறித்த விபரங்களை நீரின் அளவு, விவசாய நிலங்களின் அளவு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மத்திய அரசு மட்டுமே சேகரித்து வைக்கமுடியும் மாநில அரசுக்கு அந்த உரிமை கிடையாது.

7.மத்திய அரசு சேகரிக்கும் விவரங்களில் ஏதேனும் சந்தேகம் மாநில அரசுக்கு இருந்தால் அதனை மத்திய அரசிடம் மட்டுமே முறையிடவேண்டுமே ஒழிய மாநில அரசு கணக்கெடுப்பு பணியினை செய்யக்கூடாது.

8.இந்த ஆணையத்தை நீடிக்கவும், வேறு காரணங்களுக்காக கலைக்கவும் கூடிய உரிமை மத்திய அரசுக்கு உண்டு.

9.மத்திய அரசின் முடிவின் மீது நீதிமன்றங்கள் தலையீட முடியாது.

மத்திய அரசு தொடர்ந்து அதிகார மைய்யமாக மாறுவதை மேலும் உறுதி செய்வதற்கும். மாநில அரசுகளை மத்திய அரசிடம் கையேந்தும் நிலையில் வைக்கவும், 2018 இல் மோடி கொண்டுவந்த அணைபாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றவும் மோடி அரசு தொடர்ந்து இதுபோல மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது.

கொண்டல்சாமி


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top