பொது மக்கள் புகார்;ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற மாம்பலம் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

சென்னையில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற மாம்பலம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்ததால் சென்னையில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற மாம்பலம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். முதல் முறையாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி ஹெல்மெட் அணியாமல் மோட்டார்சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஹெல்மெட் அணியாத குற்றங்களை செய்யும் வாகன ஓட்டிகளின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யும் அளவிற்கு உச்சக்கட்ட நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

ஹெல்மெட் அணியாமல் செல்லும் போலீசார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஜி.பி. அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் டி.ஜி.பி.யின் அறிவிப்பு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.

ஹெல்மெட் அணியாமல் போலீசார் சென்றால் அவர்களை புகைப்படம் எடுத்து புகாராக அனுப்புவதற்காக சமீபத்தில் செல்போன் செயலி ஒன்றை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அறிமுகப்படுத்தினார். அந்த செல்போன் செயலி மூலம் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டிச் செல்லும் போலீசார் பற்றிய புகைப்படங்களை எடுத்து பொதுமக்கள் புகார்களை அனுப்பி வருகின்றனர்.

இந்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் முறையாக தவறு செய்யும் காவல் துறையினருக்கு அபராதமும், 2-வது முறையாக தவறு செய்யும் பட்சத்தில் அவர்கள் மீது இலாகா பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் 2-வது முறையாக ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற மாம்பலம் போலீஸ் நிலைய சட்டம்- ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஹெல்மெட் அணியாமல் சென்றதை செல்போன் செயலி மூலம் பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் முதலில் அபராதம் விதிக்கப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பவனி வந்துள்ளார். இதை கண்காணித்த ஒருவர் மாம்பலம் போலீஸ் நிலைய வாசலில் வைத்து புகைப்படம் எடுத்து புகாராக அனுப்பிவிட்டார். அந்த புகார் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் மதன் குமாரை பணியிடை நீக்கம் செய்து தென்சென்னை இணை கமிஷனர் மகேஸ்வரி நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

ஹெல்மெட் அணியாமல் செல்லும் போலீசார் மீது முதல் முறையாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை சென்னை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top