தமிழக மக்களை ஏமாற்றிய மத்திய மாநில அரசுகள்; 2017-ம் ஆண்டே திருப்பி அனுப்பப்பட்டது நீட் மசோதா

ஐகோர்ட்டில் மத்திய அரசு மறைக்கமுடியாமல் ‘நீட்’ மசோதாக்கள் 2017-ம் ஆண்டே தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டன என்று உண்மையை கூறி அறிக்கை தாக்கல் செய்தது.

தமிழ்நாட்டில் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் ‘நீட்’ தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

‘நீட்’ தேர்வு, கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கருதி, இந்த தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.தமிழக மாணவர்களும் பெற்றோர்கள், அரசியல் இயக்கத்தினர் என பல்வேறு தரப்பினர் போராடி வலியுறுத்தியதால் வேறு வழி இல்லாமல் ஆளும் அதிமுக அரசு இறங்கிவந்தது  

அதைத் தொடர்ந்து, ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டசபையில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை சட்ட மசோதா, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை சட்ட மசோதா என 2 மசோதாக்களை நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.ஆனால் நீட் தேர்வு குறித்து கடந்த இரண்டு ஆண்டுகாலமாக மாணவர்கள்,மக்கள் இயக்கத்தினர் போராடினால் மத்திய அரசுக்கு நாங்கள் தீர்மானத்தை அனுப்பி வைத்திருக்கிறோம் அது வந்ததும் பார்க்கலாம் என்று சொல்லிவந்தது அதிமுக அரசு  

இந்த நிலையில், இந்த சட்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி, பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு கடந்த 6-ந் தேதி நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டு விட்டதாக மத்திய உள்துறை சார்பு செயலாளர் கூறியதாக மத்திய அரசு வக்கீல்கள் கூறினர்.

அதைத் தொடர்ந்து, “தமிழக அரசு அனுப்பிய 2 சட்ட மசோதாக்கள் எப்போது பெறப்பட்டன?, அந்த மசோதாக்கள் எப்போது நிராகரிக்கப்பட்டன? என்பது உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்” என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், மத்திய அரசு உள்துறை அமைச்சக துணைச்செயலாளர் ராஜிஸ் எஸ்.வைத்யா, சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் கூறி இருப்பதாவது:-

‘நீட்’ தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளித்து ஜனாதிபதியின் ஒப்புதல் பெறுவதற்காக தமிழக அரசு அனுப்பிய 2 சட்ட மசோதாக்களும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி கிடைத்தன. அன்றைய தினமே இந்த மசோதாக்கள் உரிய நடவடிக்கைக்காக மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைச்சகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இந்த அமைச்சகங்களில் இருந்து உரிய கருத்துருக்கள் பெற்று கடந்த 2017-ம் செப்டம்பர் 11-ந்தேதி ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாக்களை நிறுத்தி வைத்தும், நிராகரித்தும் ஜனாதிபதி 2017 செப்டம்பர் 18-ந்தேதி உத்தரவிட்டார்.

அதன்பிறகு அந்த 2 சட்ட மசோதாக்களும் 2017 செப்டம்பர் 22-ந் தேதியே தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. அதற்கான ஆவணங்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக மத்திய அரசும் மாநில அரசும் இந்த நீட் விசயத்தில் சொந்த மக்களை ஏமாற்றி வந்துள்ளது இதன் மூலம் தெரிகிறது .பள்ளிக்குழந்தைகள் தனது டாக்டர் கனவு நனவாகவில்லை என்று தற்கொலை செய்துள்ளது எதுவும் இந்த அரசை பாதிக்கவில்லை அப்போதும், ஈவு இரக்கமில்லாமல் மக்களிடம் பொய்யையே சொல்லிவந்துள்ளது இந்த அரசு.சொந்த மக்களையே ஏமாற்றும் இப்படி  ஒரு அரசு உலகத்தில் இருந்ததாக சரித்திரம் இல்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்    

இந்த நிலையில் ‘நீட்’ தேர்வு தொடர்பான வழக்கு, இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top