முகிலன் மீது பாலியல் புகார்; திட்டமிட்டு சிதைக்கப்படும் போராளிகளின் பிம்பம் ஒரு பார்வை

கடத்தப் பட்டு நேற்று ஆந்திராவில் மீட்கப்பட்ட சமூக,சுற்றுச்சூழல் போராளி முகிலன் தமிழகத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது ஏற்கனவே தயாராக பதிவு செய்யப்பட்ட கற்பழிப்பு வழக்கில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.இது போன்றுதான் தெகல்கா பத்திரிக்கையின் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதும் விக்கிலீக்ஸ் ஆசிரியர் ஜூலியன் அசாஞ்சே மீதும் பாலியல் வழக்கு போடப்பட்டது என்பது நினைவிருக்கட்டும்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் மிகப்பெரிய போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய வீடியோவை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி சமூக ஆர்வலர் முகிலன் வெளியிட்டார்.

அன்றைய தினம் இரவு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு ரெயிலில் சென்றபோது முகிலன் மாயமானார். இந்த சம்பவம் குறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.


பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. முகிலனை கண்டுபிடித்து தரக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. முகிலன் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று அவரது ஆதரவாளர்கள் கூறிவந்தனர். சி.பி.சி.ஐ.டி போலீசாரும் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் திருப்பதி ரெயில் நிலையத்தில் வைத்து முகிலன் நேற்று முன்தினம் இரவு பத்திரமாக மீட்கப்பட்டார். அவரை திருப்பதி ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார், வேலூர் மாவட்டம் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர் தமிழக ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தமிழக ரெயில்வே போலீசார் முகிலனை நேற்று அதிகாலை 4 மணியளவில் சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். சென்னை எழும்பூர் பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் முகிலன் காவலில் வைக்கப்பட்டார்.

அங்கு அவர் ஓய்வெடுக்க அனுமதிக்கப்பட்டார். காலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வாங்கிக்கொடுத்த இட்லியை வாங்கி சாப்பிட்டார். அதன்பிறகு சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரிடம் விசாரணையை தொடங்கினர். சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. சங்கர், சூப்பிரண்டு மல்லிகா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முகிலனிடம் விசாரணை நடத்தினார்கள். முகிலன் கடத்தப்பட்டாரா? இத்தனை நாட்கள் எங்கு தங்கியிருந்தார்? என்பன போன்ற விவரங்களை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் துருவி, துருவி கேட்டனர்.

சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளின் கேள்விகளுக்கு முகிலன் முறையாக பதில் அளிக்ககே கூடிய மனநிலையில் இல்லை  என்று கூறப்படுகிறது. தனது போராட்டங்கள் பற்றி தான் முகிலன், போலீசாரிடம் விளக்கமாக கூறினார்.

தான் காணாமல் போனது பற்றிய தகவல்கள் எதையும் முகிலன் கூறமறுத்து விட்டார்  . ‘என்னை கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்துங்கள், நீதிபதியிடம் எல்லா விவரத்தையும் விளக்கமாக கூறுகிறேன்’ என்று முகிலன் போலீஸ் அதிகாரிகளிடம் பதில் அளித்ததாக தெரிகிறது.

இருந்தாலும் மாலை வரை அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மாலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி தகவல் ஒன்றை தெரிவித்தனர். கடந்த மார்ச் மாதம் கரூர் மாவட்டம் குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் முகிலன் மீது கற்பழிப்பு, 417[திருமண ஆசை காட்டி ஏமாற்றுதல்] மற்றும் 376 பாலியல் பலாத்காரம் -பெண்கள் வன்கொடுமை சட்டம், ஆகியவற்றின் கீழ் ஒரு வழக்கு பதிவு செய்திருந்தனர்.

அந்த வழக்கில் முகிலன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், முதலில் அவர் சென்னை எழும்பூர் 2-வது மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும், அதன்பிறகு நாளை  அவர் கரூர் கோர்ட்டில் முறையாக ஆஜர்படுத்தப்படுவார் என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

முகிலன் மீது கடந்த மார்ச் மாதம் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு பெண் புகார் கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது  


முகிலனை பல்வேறு சமூக ஆர்வலர்கள் நேற்று சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து சந்தித்து பேசினார்கள். சமூக ஆர்வலர் ஒருவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முகிலன் இயல்பான நிலையில் இல்லை. அவர் ஒரு சமூக போராளி. மக்களுக்காக துணிச்சலாக எத்தனையோ போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார். அவர் உடல் முழுக்க காயங்கள் உள்ளன. நெஞ்சுவலியால் கூட அவர் அவதிப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ளவில்லை. பொதுவாக அவர் சித்த மருத்துவ முறையிலேயே எந்த நோய்க்கும் சிகிச்சை பெற்றுக்கொள்வார். அவர் காட்பாடிக்கு அழைத்து வரப்பட்டவுடன், ஆஸ்பத்திரி ஒன்றில் போலீசார் அவரை சிகிச்சை பெற வைத்துள்ளனர். நாய் கடிக்காக அவருக்கு ஊசி போடப்பட்டு உள்ளது. அவர் சர்க்கரை நோயாளி. மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

சமூகப்போராளிகள் மக்களுக்கு எதிரான திட்டங்களில் சமரசமற்ற கொள்கையோடு போராடுவதால் மக்கள் பலம் போராளிகளுக்கு எப்போதும் இருக்கும். மக்களிடமிருந்து போராளிகளை பிரிக்க அரசுகள் பல தந்திரங்களை  கையாளும் அதில் ஒன்று பெண்கள் விவகாரம்.இந்த விவகாரத்தில் மட்டும்தான்  போராளிகள் மீதான நம்பிக்கை சீர்குலைக்கப்படும்.அப்படி ஏதேனும் இருப்பினும் அது அவர்களுடைய தனிப்பட்ட விவகாரம்.பாலியல் புகார் கொடுத்தவர் ஒன்றும்  ஏதும் தெரியாத சின்ன குழந்தை அல்ல அவர் 37 வயது நிரம்பியவர் ,நன்கு படித்தவர்.

உலகெங்கும் வலதுசாரி அரசியல் தன்மை வியாபித்து இருக்கிற நிலையில் அரசியல் மற்றும் சமூகப்போராளிகள் மீது இது போன்ற பெண் விவகார குற்றச்சாட்டுதான் சுமத்தப்பட்டு அவர்களுடைய போராளி பிம்பம் கேள்விக்குள்ளாக்கப்பட்டு இருக்கிறது, உதாரணத்திற்கு தெகல்கா பத்திரிக்கையின் ஆசிரியர் தருண் தேஜ்பால் இந்திய –தென் ஆப்பிரிக்க கிரிகெட் ஊழலை வெளிக்கொண்டுவந்தார் பின்பு முகமுக்கியமான இந்தியாவின் ராணுவ ஆயுத பேர ஊழலை வெளிக்கொண்டுவந்து புலனாய்வு பத்திரிக்கைக்கு முன் உதாரணமாக திகழ்ந்தார்.கடைசியில் அவருக்கு என்ன நடந்தது? அவருடன் இருந்த அவர் மகள் வயது கொண்ட பெண் உதவியாளர் மூலம் புகார் கொடுக்கப்பட்டு அவருடைய பிம்பம் சிதைக்கப்பட்டது. இதுபோன்றுதான் சமீபத்தில்   ஜூலியன் அசாஞ்சே ஈக்வேடார் தூதரகத்திலிருந்து பிரிட்டன் போலிசாரால் கைது செய்து இழுத்துச் செல்லப்பட்டார் அவர் செய்த குற்றம் என்ன?

2006ம் ஆண்டு விக்கிலீக்ஸ் இணையத்தினை அவர் துவங்கினார். அசாஞ்சே பல நாடுகளுக்கு தொடர் பயணம் செய்து விக்கிலீக்ஸ்க்கான கட்டமைப்பையும், தொடர்பையும் பலப்படுத்தினார். இணையதள சென்சாருக்கு எதிரான ஒன்றாக விக்கிலீக்ஸ் வளர ஆரம்பித்தது. அரசுகள் மற்றும் கார்ப்பரேட்டுகள் இணைந்து மக்களுக்கு எதிராக மேற்கொள்ளும் ரகசிய சூழ்ச்சிகளை எல்லாம் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தத் துவங்கியது. குரலற்ற மக்களின் குரலாக விக்கிலீக்ஸ் பரிணமிக்க ஆரம்பித்தது. டிஜிட்டல் உலகத்தின் செய்தித் துறையில் ஒரு புதிய புரட்சியினை விக்கிலீக்ஸ் உருவாக்கியது.

’பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற பெயரில் ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும், ஏமனிலும் அமெரிக்கா செய்த போர்க்குற்றங்களை முழு ஆதாரங்களுடன் விக்கிலீக்ஸ் வெளியிட்டது

அசாஞ்சேவிற்கு உலகம் முழுதும் உருவான பெரும் ஆதரவினைக் கண்டு அச்சமுற்ற அமெரிக்க வல்லரசு, அவரை தனிப்பட்ட ரீதியில் கொச்சைப்படுத்தும் நோக்கில் இறங்கியது. ஸ்வீடன் நாட்டில் 2010ம் ஆண்டு அவரின் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளின் பேரில் விசாரணைக்கு ஆஜராகி அக்குற்றச்சாட்டுகளை அசாஞ்சே மறுத்தார். போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் அந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது. சில காலத்திற்கு பின், அந்த வழக்கு இன்னொரு வழக்கறிஞரின் மேல்முறையீட்டினைக் காரணம் காட்டி மீண்டும் விசாரணைக்கு திறக்கப்பட்டது. அந்த வழக்கிற்கும் முறையான ஒத்துழைப்பினை அசாஞ்சே வழங்கியிருந்தார்.

இப்படிதான் உலகம் முழுவதும் போராளிகளை கொச்சைப்படுத்துவது நடந்து வருகிறது ஆகையால் மீடியாக்கள் இதை பூதகரமாக்கி அவர்களுடைய தனிப்பட்ட விசயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top