தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ தேர்வுக்கு எதிரான மசோதா நிராகரிப்பு : ஐகோர்ட்டில் தகவல்

‘நீட்’ தேர்வுக்கு எதிரான தமிழக சட்டசபை மசோதாவை மத்திய பாஜக அரசு நிராகரித்துவிட்டதாக இப்போது செய்திகள் வருகிறது. இதுவரை இது ஏன் மறைக்கப்பட்து தமிழக மக்களை ஏன் இரு அரசுகளும் ஏமாற்றியது?  

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாக்களை, மத்திய அரசு நிராகரித்து விட்டதாக ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கும், மருத்துவ மேற்படிப்புகளுக்கும் ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டில் முன்பு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில்தான் மருத்துவ படிப்பு களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் ‘நீட்’ தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

‘நீட்’ தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும், எனவே இந்த தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வற்புறுத்தி வருகின்றன.

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டசபையில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை சட்டம், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை சட்டம் என இரு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டன.

இந்த நிலையில், இந்த சட்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி, பொதுமக்கள் மேடை சார்பாக பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட இரு சட்ட மசோதாக்களுக்கும் ஜனாதிபதியின் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம், மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும்.

இந்த சட்ட மசோதாக்களுக்கு குறித்த காலத்தில் ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டு இருந்தால், அரியலூர் மாணவி அனிதா மரணம் நிகழ்ந்து இருக்காது. அவருக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைத்து இருக்கும்.

நாடாளுமன்ற குழு பரிந்துரையின்படியும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படியும், மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் அந்தந்த மாநிலங்களே சொந்த நடைமுறையை பின்பற்றிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசின் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி, “2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக அரசு இரு சட்டமசோதாக்களை இயற்றி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியது. அவற்றை அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந் தேதி ஜனாதிபதி நிறுத்தி வைத்து உள்ளார்” என்று கூறினர்.

உடனே நீதிபதிகள், “இந்த சட்ட மசோதாக்கள் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளதா?, நிராகரிக்கப்பட்டு உள்ளதா?” என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு மத்திய அரசு வக்கீல்கள், “இதுகுறித்து மத்திய உள்துறை சார்பு செயலாளரிடம் கேட்டபோது, இரு மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டு விட்டதாக கூறினார்” என்று பதில் அளித்தனர்.

இதையடுத்து நீதிபதிகள், “தமிழக அரசு அனுப்பிய 2 சட்ட மசோதாக்கள் எப்போது பெறப்பட்டன?, அந்த மசோதாக்கள் எப்போது நிராகரிக்கப்பட்டன? என்பது உள்ளிட்ட விவரங்களை வருகிற 16-ந் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

அத்துடன் விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

2017 செப்டம்பரில் இரு மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டிருந்தால் ஏன் அதை மக்களிடம் சொல்லாமல் மத்திய அரசு ஏமாற்றியது? இல்லை தமிழக அரசுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுருந்தால் தமிழக அரசு மக்களை ஏமாற்றியதா? இரு அரசுகளும் இப்படி மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துவது அருவருக்கத்தக்கது என்று சமூக ஆர்வலகள் முகநூலில் கண்டித்து எழுதுகிறார்கள்.  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top