ஆனந்த் பட்வர்த்தனின் “விவேக்” (Reason) ஆவணப் படம்; பாஜக வின் பொய்யும் புரட்டும்!

வெறும் பொய்களாலும், வெறுப்பு அரசியலாலுமே மட்டும் ஆட்சியைப் பிடித்திருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் சவாலே அவர்களை பற்றிய உண்மைகள் மக்களுக்கு சென்று சேர்வதை எப்படித் தடுப்பது என்பது தான். இந்திய ஊடகங்கள், சமூக ஊடகங்கள் போன்றவற்றை தங்கள் கட்டுப் பாட்டுக்குள் ஓரளவுக்கு கொண்டு வந்து விட்டாலும், சுதந்திரமாக இயங்கும் படைப்பாளிகளின் வாய்களை மட்டும் மூட முடியவில்லை. எங்கே தங்களின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி விடுவார்களோ என்பது தான் இவர்களின் பெரிய அச்சாமாக இருக்கிறது.

இந்துத்துவத்தை தனது ஆவணப் படங்கள் மூலம் தோலுரித்துக் காட்டுவதில் முக்கியமானவர் ஆனந் பட்டவர்தன். இவர் ”ராமனின் பெயரால்”, ”அப்பா, மகன் புனித யுத்தம்”, ”ஜெய் பீம் காம்ரேட்” போன்ற, சர்வதேச அளவில் பாராட்டுக்களை பெற்ற ஆவணப் படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது அவர் இயக்கி வெளி வந்திருக்கும் ஆவணப் படம் ”விவேக் (Reason)”. இந்தியாவில் இந்துத்வ பயங்கரவாதத்தைப் பற்றியும், இந்துத்வ தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட தபோல்கர், பன்சாரே போன்றவர்களைப் பற்றியும், மதச் சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்களைப் பற்றியும் இந்த 4 மணி நேர ஆவணப் படம் விரிவாகப் பேசுகிறது.

செப்டம்பர் 2018 இல் இந்த ஆவணப் படம், டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில்(Toronto International Film Festival (TIFF))  திரையிடப் பட்டு அனைவரது பாராட்டுகளையும் பெற்றது. அது மட்டுமல்லாமல் ஆம்ஸ்டர்டேம் திரைப்பட விழாவிலும் (International Film festival of Amsterdam), லாஸ் ஏன்ஞெல்ஸ் இந்திய திரைப்பட விழாவிலும்(17th Indian Film Festival of Los Angeles)  திரையிடப்பட்டு பரிசுகளை வென்றது.

தற்போது, கேரள அரசு (Kerala State Chalachitra Academy) நடத்தும் ஆவணப் பட விழாவில் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இந்த அவணப் படத்தை திரையிட்டால் சட்ட ஒழுங்கு சிக்கல் வர வாய்ப்பிருக்கிறது என்று கூறி ஆளும் பா.ஜ.க மத்திய அரசு திரையிட அனுமதியை மறுத்தது.

இந்திய திரைப்படச் சட்டத்தின் படி (cinematograph Act), ஒரு ஆவணப் படத்தை மாணவர்கள், திரைத் துறையினர், பத்திரிக்கையாளர்கள்,திரைப்பட விமர்சகர்கள் போன்றோர் கலந்து கொள்ளும் திரப்பட விழாக்களில் திரையிடுவதற்கு மத்திய அரசிடம் இருந்து தணிக்கைச் சான்றிதழ் வாங்க வேண்டிய தேவையில்லை. தணிக்கை வாங்குவதில் இருந்து விலக்கு பெற்று விட்டு ஆவணப் படங்களைத் திரையிடலாம். சட்டம் இப்படி இருக்க, பா.ஜ.க அரசு அப்பட்டமான சட்ட மீறலைச் செய்து ஆவணப் படத்திற்கு அனுமதியை மறுத்தது.

மேலும் ”சட்ட ஒழுங்கு சிக்கல்” என்பது மாநில அரசு சம்மந்தப்பட்டது. இந்த திரைப்பட விழாவையே கேரள மாநில அரசு தான் நடத்தி வருகிறது. அனுமதியை மறுத்ததன் மூலம் மாநில அரசின் உரிமைகளை அப்பட்டமாக மீறியிருக்கிறது பா.ஜ.க அரசு.

இதை எதிர்த்து கேரள அரசும், ஆனந் பட்டவர்தனும் நீதிமன்றத்தை நாடினர். வழக்கை விசாரித்த நீதிபதி, பா.ஜ.க அரசின் தடையில் உள்ள நியாயமின்மையை உணர்ந்து ஆவணப் படத் திரையிடலுக்கு அனுமதியும் வழங்கியது. இதையடுத்து நேற்று அந்த ஆவணப் படம் திரையிடப் பெற்று, வெற்றியும் பெற்றது.

ஆனந் பட்டவர்தன், மதச்சார்பின்மையை அச்சுருத்தும் இந்துத்வ பயங்கரவாதத்திற்கு எதிராக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருபவர். ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு ஆதரவாக ஆனந் பட்டவர்தனின் குரல் ஒலிக்கும். கடந்த பிப்பிரவரி மாதம், இனப்படுகொலையாளன் இராஜபக்சேவை இந்து நாளிதழ் தங்கள் நிகழ்விற்கு அழைத்திருந்த போது, அதை எதிர்த்து இந்தியாவில் உள்ள பல்வேறு செயற்பாட்டாளர்கள் கையெழுத்திட்டனர். அதில் ஆனந் பட்டவர்தனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அருண் காளிராஜ்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top