நெல்லை பத்திரிகையாளர் மன்றம் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரிக்கை

சமீபத்தில் பாமக தலைவர் டாக்டர் இராமதாஸ் ‘வெறுப்பு அரசியல்‘ பற்றிய கருத்தரங்கில் பத்திரிக்கையாளர்களை கடுமையாக தாக்கி பேசியிருந்தார். இதுவரை எந்த அரசியல் தலைவர்களும் இப்படி பேசியதில்லை. எனவும், கொலை மிரட்டல் செய்யும் அளவிற்கு தரம்கெட்டு பேசியிருக்கிறார் என்றும் பத்திரிக்கையாளர் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறது.

பாஜக வை சேர்ந்த காமடி நடிகர் எஸ் வி சேகர் பேசியதற்கு கொந்தளித்த பத்திரிக்கையாளர்கள் இதற்கு ஏன் அவ்வளவாக கொந்தளித்து போராட்டம் பண்ணவில்லை என்று பாஜக காரர்களே கேட்கும் அளவிற்கு சிலர் பேர் கொளுத்தியும் போடுகிறார்கள்.

இது தண்ணீர் பிரச்சனையை மறக்கடிக்க மத்திய, மாநில ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட சூழ்ச்சிதான் என்றும் கூறுகிறார்கள்.

இந்நிலையில் நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர் அய்கோ அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். பத்திரிக்கையாளர்களின் அவல நிலையையும் இந்த அரசு செய்ய வேண்டிய கடமைகளையும் குறிப்பிட்டு,நினைவு படுத்தி  கோரிக்கையாக வெளியிட்டு இருக்கிறார்.

அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் …

‘ஊரு ஒச்சம், வீடு பட்டினி’ என்ற பழமொழி வேறு யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ,  பத்திரிகையாளர்களுக்கு மெத்தப் பொருந்தும். இன்றைய சூழலில் 24 மணி நேரம் இடர்மிகு பணிபுரிவதில் காவலர்கள், ராணுவத்தினருக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்லர் பத்திரிக்கையாளர்கள்.

ஆனால் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தில், அரசில், சமூகத்தில் அவர்களுக்குரிய அங்கீகாரம் இல்லை.

அவர்கள் பணிபுரியும் அலுவலகத்தில் அவர்களை குறித்து முறையான ஆவணம் பேணப்படுவதில்லை. பணிநிலையே மறைக்கப்படுவதால்அதற்கேற்ப ஊதியம் வழங்கப்படுவதில்லை. பணி நிரந்தரம் இல்லை. அமைச்சர்கள், ஆட்சியர்கள், நீதியரசர்கள் என  அனைவரின் நடுவிலும் வேலை பார்த்திருந்தாலும், திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டாலோ, கலவரம், விபத்து ஆகியவற்றால் பாதிக்கப்பட்டாலோ, பத்திரிக்கை வெளியிட்ட செய்திக்காகவே தாக்கப்பட்டாலோ, நிருபர் என்று நிரூபிக்க முடியாதவாறு கைவிடப்படும் நிச்சயமற்ற நிலை தான்.

சமூகத்திலும் ‘பாவம் ஓரிடம்,பழி ஓரிடம்’ என்பதுபோல நிர்வாகத்தின் முடிவிற்கு ஏற்ப வெளியிடப்படும் செய்திகளுக்கு பத்திரிகையாளர்களின் தலை உருட்டப்படும். கோரிக்கைகள், போராட்டங்கள், கருத்துக்கள் யாவற்றையும்  பொலிவுற வெளியிட்டாலும், போலி அனுதாபமே காட்டுவார்கள்.என்றாலும்,

இவற்றையெல்லாம் நாங்களும் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. புகழுக்கோ பொருளுக்கோ தயங்குவதில்லை.

ஆனாலும்,  நியாயமான சில நீண்டகால கோரிக்கைகளை  சட்டமன்றம் கூடும் இக்காலகட்டத்தில் முன்வைக்கிறோம், விவாதிக்க அல்ல, எமது நிலையை அறிந்து நிறைவேற்ற.வேண்டும்  

முதலாவதாக பத்திரிக்கையாளர்கள் அங்கீகார அட்டை வழங்குவதற்கு பத்திரிக்கை நிறுவனம் தான் பரிந்துரைக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும். நிருபர், புகைப்படக்காரர் என்று ஆவணப் பூர்வமாகவே ஒப்புக்கொள்ளாத பத்திரிக்கை நிறுவனத்தார் எப்படி அங்கீகார அட்டைக்கு கையொப்பமிடுவர்?  எனவே, மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் மூலமாக மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பேரில், அல்லது அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர் சங்கங்களின் பரிந்துரையின்பேரில்  அங்கீகார அட்டை வழங்க வேண்டும். அடுத்து மாவட்டத்திற்கு ஒரு பத்திரிக்கைக்கு இத்தனை பத்திரிகையாளர்களுக்குத்தான் பேருந்து பயண சலுகை என்றில்லாமல், உண்மையிலேயே பத்திரிக்கைகளில் பணியாற்றும் அனைவருக்கும் பயண சலுகை அட்டை வழங்கப்பட வேண்டும்.

பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைக்கவேண்டும் என  30 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறோம். இப்போதாவது அதை  அமைத்து, அதன் மூலம் பிற தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதுபோல் இலவச  வீட்டுமனை, வீடு கட்டும் நிதி, மருத்துவ காப்பீடு, விபத்து காப்பீடு உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும்.

உழைக்கும் பத்திரிகையாளர் சட்டத்தின்படி மாவட்டம் தோறும் பத்திரிகையாளர்களுக்கென்று தனி தொழிலாளர் அலுவலர் நியமிக்கப்பட வேண்டும்.

மிக முக்கியமாக,  உழைக்கும் பத்திரிகையாளர் சட்டப்படி, பகுதிநேர நிருபரும் பகுதி நிருபரும் பத்திரிக்கையாளர்களே. அவர்களுக்கு திட்டவட்டமான, நியாயமான ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும். அவர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கான சலுகைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும்.உதவி ஆசிரியர்கள், பிழை திருத்துவோர், வடிவமைப்பாளர் உள்ளிட்ட பத்திரிக்கை பணியாளர்களுக்கும் அவர்கள் பணியின் தன்மைக்கேற்ப உரிய ஊதியம் சலுகை வழங்கப்பட வேண்டும். பத்திரிக்கை வெளிவர பணி புரியும் இன்னும் பல வகை பணியாளர்களை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சட்டத்தில் இணைக்கவில்லை. தொழிலாளர் அலுவலர்கள் மூலம் ஆய்வு நடத்தி, அவர்களையும் சட்டப்பாதுகாப்பின் கீழ் கொண்டுவர வேண்டும். பத்திரிகையாளர்களுக்கு  நீதியரசர் மஜிதி குழு பரிந்துரைப்படி பெரும்பாலான பத்திரிக்கைகள் ஊதியம் வழங்கவில்லை. அதுபற்றி முதல்வர் முதல் தொழிலாளர் துறையின் அனைத்து அதிகாரிகளிடமும் முறையிட்டும் கேளாச் செவி யினராக உள்ளனர். உடனடியாக அவர்களது மவுனத்தைக் கலைத்து எங்களுக்கு உரிமையான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

பத்திரிக்கையாளர் சட்டப்படி வார, மாத இதழ்களான Periodical யாவுமே பத்திரிக்கைகள் தாம். அவ்வவற்றுக்குரிய அங்கீகாரம், சலுகை வழங்கவேண்டும். தமிழில் பெயரிட்டாலே சினிமாவுக்கு சலுகையளிக்கின்றனர். தமிழுக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் உழைக்கும் பத்திரிகைகளுக்கு நியாயமான தாள்,  விளம்பரம், தொலைபேசி, அஞ்சல் சலுகைகளை வழங்கினால் என்ன?(இது மைய அரசுக்கும் சேர்த்து)

தமிழகம் முழுவதும் சலுகை வீட்டு மனை பெறாத ஏராளமான பத்திரிகையாளர்கள் உள்ளனர். அவர்கள் மனுக்கள் மாவட்ட  ஆட்சியர்களின் மேசைகளில் தூங்குகின்றன. அவற்றை தூசிதட்டி அனைவருக்கும் சலுகை விலை வீட்டு மனை வழங்கப்படவேண்டும். வாரியம் அமைப்பதற்கு தாமதமானாலும்,வீடு கட்டுவதற்கு உரிய நிதி உதவியோ, வட்டியில்லா கடனுதவியோ இந்த கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட வேண்டும்.

இறுதியாக இன்றியமையாத கோரிக்கை ஒன்று. ஜனநாயகத்தின் நான்காம் தூண் ஆகிய பத்திரிக்கையின் அடிக்கற்கள் ஆகிய பத்திரிக்கையாளர்களுக்கு சிறிதும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எனவே, பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்புக்கென தனிச்சட்டம் வகுக்கப்பட வேண்டும். அதில் கலவரம், போராட்டம், விபத்து, ஆய்வு உள்ளிட்ட பல்வேறு கட்டங்களில் பத்திரிகையாளர்களுக்கு தரப்படவேண்டிய முன்னுரிமை, வாய்ப்பு, பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். என்று கோரியிருக்கிறார்

,


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top