குடிநீருக்காக கண்ணீர் சிந்தும் மக்கள்; ‘ஜெ வுக்கு’ மணிமண்டபம் கட்ட முனைப்பு காட்டும் அரசு!

சென்னையில் தலை விரித்தாடுகிறது தண்ணீர் பஞ்சம் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் முற்றிலும் வறண்டு விளையாட்டு மைதானங்கள்போல காட்சியளிக்கின்றன. நிலத்தடிநீரும் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. இதனால் சென்னையில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.வீதிகள் தோறும் தண்ணீருக்காக மக்கள் கவலை தோய்ந்த முகத்துடன் காலிக்குடங்களுடன் அலைந்துக்கொண்டிருக்கையில் ஆளும் கட்சி அதிமுக  மந்திரிகள் சென்னையில் தண்ணீர் பஞ்சம் இல்லை என்றும் பத்திரிக்கைகளும் எதிர்கட்சிகளும் பெரிது படுத்துகிறார்கள் என்றும் எந்தவித கூச்சமும் இன்றி பச்சை பொய் சொல்லி பேட்டி கொடுக்கிறார்கள்

அதிமுக ஆட்சியின் நிர்வாக குறைபாட்டினால் சென்னைவாசிகளின் தாகத்தை தீர்க்க முடியாதநிலை உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் ஆழ்துளை கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரும் கானல் நீராக மாறிவிட்டது.

லாரிகள் மூலம் தண்ணீரை முறையாக வழங்க முடியாமல் சென்னை குடிநீர் வாரியம் திணறிவருகிறது. லாரி வருமா…தண்ணீர் கிடைக்குமா…என்ற ஏக்கத்தில் வழிமேல் விழி வைத்து மணிக்கணக்கில் சென்னைவாசிகள் காத்துக்கிடக்கிறார்கள்.

தண்ணீர் தட்டுப்பாடு பள்ளி-கல்லூரிகள், ஐஸ் உற்பத்தி தொழிற்சாலைகள், திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள், ஐ.டி. நிறுவனங்கள், ஓட்டல்கள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் என பல்வேறு பிரிவுகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் சில ஓட்டல்கள் மூடப்பட்டுவிட்டன. சில ஓட்டல்களில் உணவு பண்டங்களின் வகைகள் குறைக்கப்பட்டுள்ளது.

திருவல்லிக்கேணியில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘மேன்சன்’கள் (தங்கும் விடுதிகள்) உள்ளன. அவசர வேலைக்காக வெளியூர்களில் இருந்து வருபவர்கள், தனியார் கம்பெனிகள் மற்றும் அலுவலகங்களில் வேலை செய்யும் வெளியூர்களை சேர்ந்தவர்களுக்கு இதுதான் புகலிடமாக விளங்குகிறது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகிறது.

அங்கு தங்கியிருந்தவர்கள் சிலர் வேறு விடுதிகளுக்கும், சிலர் விடுமுறை எடுத்து சொந்த ஊர்களுக்கும் சென்றுவிட்டனர். பல தங்கும் விடுதிகளில் மோட்டார் இயக்கும் நேரம் அறிவிப்பு பலகைகளில் எழுதி ஒட்டப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் மட்டுமே தண்ணீரை பயன்படுத்திக்கொள்ளுமாறு தங்கியிருப்பவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சென்னை மற்றும் புறநகரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் விடுதிகள் உள்ளன. தண்ணீர் பஞ்சத்தால் 15 மகளிர் விடுதிகள் மூடப்பட்டுள்ளன. இங்கு தங்கியிருந்த பெண்கள் வேறு விடுதிகளுக்கு சென்றுவிட்டனர்.


தண்ணீர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி அதன் விலையையும் கணிசமாக உயர்த்திவிட்டனர். 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு டேங்கர் லாரி தண்ணீர் ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது தற்போது ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. தண்ணீர் லாரிக்கு கடுமையான கிராக்கி உள்ளதால் ஓய்வின்றி 24 மணி நேரமும் இயக்கப்படுகின்றன.

தினமும் லட்சக்கணக்கில் பயணிகள் வந்துசெல்லும் சென்டிரல் ரெயில் நிலையத்திலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள கழிப்பறைகளுக்கு முறையாக தண்ணீர் வழங்க முடியாததால் அவை பல நேரங்களில் மூடப்பட்டு உள்ளது. ரெயில் நிலைய நடைமேடைகளில் உள்ள குழாய்களிலும் முறையாக தண்ணீர் வழங்கப்படவில்லை. ஒரு நாளைக்கு 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைப்பதாகவும், அதுபோதுமானதாக இல்லை என்றும் சென்டிரல் ரெயில் நிலைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எழும்பூர் ரெயில் நிலைய அதிகாரிகள் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க புதுமுறையை கையாண்டு வருகின்றனர். கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் நேரங்களான காலை மற்றும் மாலை வேலைகளில் கழிப்பறை, நடைமேடைகளில் உள்ள குழாய்களில் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படுகிறது. ஆனால் மதிய நேரங்களில் தண்ணீர் முற்றிலுமாக வழங்கப்படுவதில்லை. இதைப்போல் சென்னையில் உள்ள புறநகர் ரெயில் நிலையங்களிலும் முறையாக தண்ணீர் வழங்கப்படவில்லை.


தண்ணீரை எவ்வளவு விலை கொடுத்தும் வாங்குவதற்காக அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பவர்களும், வசதி படைத்தவர்களும் தயாராக இருக்கின்றனர். இதனால் டேங்கர் லாரியில் கொண்டு வரப்படும் தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்குவதாக குடிசைவாசிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

சென்னைவாசிகள் அன்றாட தேவைகளுக்கு தண்ணீரை பெறுவதற்காக ஒவ்வொரு நாளும் கண்ணீர் சிந்தி வருகின்றனர். மழை பெய்து பூமி குளிர்ந்தால் மட்டுமே சென்னையில் தலைவிரித்து ஆடும் தண்ணீர் பஞ்சம் தீருவதற்கு வழி பிறக்கும். அதற்கான நாளை எதிர்நோக்கி பொதுமக்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.


சென்னையின் பிரதான ஆஸ்பத்திரியாக ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரி விளங்குகிறது. இங்கு ஆயிரக்கணக்கான நோயாளிகள் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டும் அல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இத்தகைய சிறப்பு பெற்ற ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் தற்போதைய தண்ணீர் பஞ்சத்தால், ஏராளமான கழிப்பறைகள் மூடப்பட்டுள்ளதை பார்க்க முடிந்தது. இந்த ஆஸ்பத்திரிக்கு சென்னை குடிநீர் வாரிய லாரிகள் மூலம் தண்ணீர் பெறப்பட்டபோதிலும், ஆஸ்பத்திரியின் தண்ணீர் தேவையை முழுமையாக நிறைவேற்றியதாக தெரியவில்லை.

ஆஸ்பத்திரியில் நோயாளிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் வார்டுகளின் கழிப்பறைகளில் தண்ணீர் வந்தபோதிலும், ஆஸ்பத்திரியின் பிரதான கட்டிடங்களான டவர்-1 மற்றும் டவர்-2 ஆகிய அடுக்குமாடி கட்டிடங்களின் தரைத்தளத்தில் ஆண், பெண் நோயாளிகளுக்கு தனித்தனியே கழிப்பறைகள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு பல்வேறு சோதனைகளை மேற்கொள்வதற்காக புற நோயாளிகளாக ஏராளமானோர் வருகிறார்கள். இவர்கள் இந்த பகுதியில் உள்ள கழிப்பறைகளையே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.


ஆனால், இந்த 2 அடுக்குமாடி கட்டிடங்களின் தரைத்தளத்தில் உள்ள கழிப்பறைகளில் பல கழிப்பறைகள் நேற்று மூடப்பட்டு கிடந்தன. அதிலும் குறிப்பாக ஆண் நோயாளிகளுக்கான கழிப்பறைகள் மூடப்பட்டு கிடந்தன. அப்போது சோதனைக்காக பாட்டிலில் சிறுநீர் எடுத்து கொடுப்பதற்காக வந்த ஆண் நோயாளி ஒருவர் கழிப்பறைகள் மூடப்பட்டு கிடந்ததால் செய்வது அறியாமல் திகைத்தார்.


அவர் உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுக்கு சென்று தனது சிறுநீரை பாட்டிலில் சேகரிக்கவும் அனுமதிக்கப்படாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இறுதியில் தனக்கு பாதுகாப்பாக வந்த பெண்ணின் உதவியுடன் பெண் நோயாளிகளுக்கான கழிப்பறைக்குள் சென்று தனது சிறுநீரை பாட்டிலில் சேகரித்து கொடுத்த பரிதாபத்தை பார்க்க முடிந்தது. இவ்வாறு தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகி உள்ளனர். ஆனால், மந்திரிகளோ எந்தவிதமான கருணையும் இல்லாமல்  தண்ணீர் பிரச்சனை இல்லை என்று கூறுகிறார்கள்.

மக்கள் தண்ணீர் இன்றி தவித்துக்கொண்டிருக்கையில் தமிழக முதல்வர் மற்றும் மந்திரிகள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அமைக்க மிகவும் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.மக்கள் பிரச்சனையை யோசிக்காமல் அதற்கு தீர்வு தேடாமல் மணிமண்டபம் அமைத்துக்கொண்டிருந்தால் சீக்கிரம் அதிமுக அரசுக்கு மணி அடிக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.   


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top