இந்திய கம்யூனிஸ்டு கட்சி; ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு- சிதம்பரத்தில் சாலைமறியல்

சிதம்பரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தக்கூடாது, டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தினால் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் என்பதால் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்தநிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று காலை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருந்தனர். அதன்படி சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள மெயின்ரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் சேகர் தலைமையில் தேசிய குழு தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் ராமசந்திரன், நகர செயலாளர் தமிம்முன் அன்சாரி, பரங்கிப்பேட்டை நகர செயலாளர் பரூக்அலி உள்பட 30-க்கும் மேற்பட்டோர் திரண்டனர்.பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சிதம்பரம், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்தக்கூடாது எனவும், இந்த திட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும் எனவும் கோ‌ஷம் எழுப்பினர். இந்த சாலை மறியல் போராட்டத்தினால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்லமுடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றனர்.சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினர். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததால் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரையும் கைது செய்தனர்.இந்த திடீர் மறியல் போராட்டத்தினால் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top