தமிழீழ இனப்படுகொலை10 ஆம் ஆண்டு நினைவேந்தல்; நினைவுச் சின்னம் அமைக்க மே17 இயக்கம் கோரிக்கை

தமிழீழ இனப்படுகொலைக்கான 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் மே பதினேழு இயக்கத்தினால் நேற்று மாலை சேப்பாக்கத்தில் நடத்தப்பட்டது.கலைவாணர் அரங்கு முன்பு மக்கள் ஒன்று கூடி ஊர்வலமாக சென்றனர்

தமிழீழ இனப்படுகொலைக்கான 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் கடலான மெரீனாவில் ஜூன் 9 அன்று மே பதினேழு இயக்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதிக்க மறுத்தது.

2011ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மே பதினேழு இயக்கம் நினைவேந்தலை மெரீனாவில் நடத்தி வருகிறது. 2017ம் ஆண்டு முதன்முறையாக நினைவேந்தலுக்கு தடைவிதித்து நினைவேந்த வந்தவர்களையும் மே பதினேழு இயக்க தோழர்களையும்  கைது செய்தது தமிழக அரசு. நான்கு தோழர்களை குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைத்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டும் நினைவேந்தலை தடுத்து, வைகோ உள்ளிட்ட கட்சித் தலைவர்களையும் நினைவேந்த வந்தவர்களையும் கைது செய்து, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் மீதும் வழக்கு பதிவு செய்தது தமிழக அரசு . இந்த ஆண்டு மீண்டும் நினைவேந்தல் மெரினா கடல்-தமிழர் கடலில் தடுக்கப்பட்டிருக்கிறது.

நினைவேந்தலுக்காக மெரினா கடல்-தமிழர் கடலுக்கு முன்பாக உள்ள சேப்பாக்கம் கலைவாணார் அரங்கம் முன்பான சாலையில் தோழர்களும், பொதுமக்களும் கூடினர். நினைவேந்தல் அனுமதிக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பேரணியாக நடந்து சென்றனர்.

தமிழக சட்டமன்றத் தீர்மானத்தினை மதிக்க வலியுறுத்தியும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்த நிகழ்வில் தோழமையாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் ஆளூர் ஷானவாஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் துணைத் தலைவர் வேணுகோபால், தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் அரங்க குணசேகரன், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் குமரன், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டைசன், திராவிடத் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் சங்கர், தமிழர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி மற்றும் புருசோத்தமன் ஆகியோர் நினைவேந்தல் தமிழர் கடலில் நடத்துவதன் முக்கியத்துவம் குறித்துப் பேசினர்.

தமிழீழ போராளிகள் மற்றும் மக்களுக்கு மரியாதை செலுத்தும் நினைவு தீபத்தினை மேடையில் தோழர்கள் ஏற்றினர்.

பாலச்சந்திரன் மற்றும் இசைப்பிரியா உருவப்படங்களுக்கு தோழர்கள் மரியாதை செலுத்தினர்.

தமிழர் கடலின் நினைவேந்தும் உரிமையை மீட்க ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் மீண்டும் வருவோம் என்று தோழர்கள் உறுதியேற்றனர்.

தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தின் படி, இலங்கை அரசுடனான அரசியல்-பொருளாதார-ராணுவ உறவுகளை துண்டிக்க வேண்டும் என்றும், இலங்கை அரசு மீது இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை கொண்டு வரவும், தமிழீழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பினைக் கொண்டு வர முயல வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.

மேலும், தமிழீழ இனப்படுகொலையை நினைவு கூறும் விதமாக தமிழர் கடலான மெரீனாவில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top