கோடையில் மழைவேண்டி இயற்கைக்கு எதிராக கோவில்களில் யாகம் நடத்த- அறநிலையத் துறை உத்தரவு

கோடை காலம் தமிழகத்தில் வெயில் கொளுத்துகிறது.பருவ மாற்றம் என்பது இயற்கையின் சுழற்சி. தமிழர்கள் காலமாற்றத்திற்கு தகுந்தார் போல் தங்களுடைய உற்பத்திகளை மாற்றவும் ,  பக்குவப்படுத்தவும் காலகாலமாக செய்துவருகிறார்கள். கோடை காலம் வந்தாலே நமது பாரம்பரிய பனை பொருட்கள் சீசன் வந்துவிடும் .

பனையை  பூலோக கற்பகவிருட்சம் என்று சொல்வார்கள். பனைக்கும் தமிழர்களுக்கும் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு பந்தம் இருக்கிறது. பனை எங்கு செழித்து காணப்படுகிறதோ அங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்கள் அல்லது தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் பனைமரங்கள் செழித்து காணப்படுகின்றன என்று சொல்லும் விதத்திலேயே இயல்பிலே இருக்கிறது. அதனால் தான் பண்டைய பாண்டிய மன்னர்கள்  பனம்பூவை சூடிக் கொண்டார்கள்.

கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச் சத்தினை பனைமரம் அள்ளி தருகிறது. பதநீர் நுங்கு. பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் எல்லாமே மருத்துவ குணம் வாய்ந்தவை. நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இயற்கை நமக்கு கொடையாய் அளித்துள்ள நுங்கு கோடை வெப்பம் தணிக்க பயன்படுகிறது.அதுபோன்று மா ,பலா போன்ற கனிகள் இந்த காலத்தின் பயிர்கள். இயற்கை காலமாற்றத்திற்கு தகுந்தாற்போல் நமக்கு பயிர்களை,உணவுப் பொருட்களை வழங்குகிறது அதுதான் இயற்கை.

ஆனால், வழக்கத்தில் இல்லாத ஒரு பழக்கத்தை  இன்று தமிழகம் சந்தித்துக்கொண்டு இருக்கிறது. மதநம்பிக்கையும் அரசியலும் கலந்து  மனிதனை மூட நம்பிக்கைக்கு மட்டுமல்ல இயற்கைக்கு எதிராகவும் செயல்பட வைக்கிறது.

தமிழகத்தில் இந்த கோடையில் பருவமழை பெய்வதற்காக முக்கிய கோயில்களில் யாகம் நடத்த வேண்டும் என்றும் மழை வருவதற்கான இசையை இசைக்கவேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் க.பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

க.பணீந்திர ரெட்டி, அனைத்து இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2019-20-ம் ஆண்டு ஸ்ரீவிகாரி ஆண்டில் நல்ல பருவமழை பெய்து நாடு செழிப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முக்கிய கோவில்களில் மழை வேண்டி யாகம் செய்ய உத்தேசிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, சில நிகழ்ச்சிகளை அவரவர் பிரிவில் உள்ள முக்கிய கோவில்களில், அந்தந்த கோவில்களின் பழக்க வழக்கத்துக்கு உட்பட்டு நடத்த அனைத்து சார்நிலை அலுவலர்களையும் கேட்டு கொள்கிறேன்.

* பர்ஜன்ய சாந்தி வருண ஜபம் வேள்வி செய்து சிறப்பு அபிஷேகம் செய்தல்.

* நந்தி பெருமானுக்கு நீர்த்தொட்டி கட்டி நந்தியின் கழுத்து வரை நீர் நிரப்பி வழிபாடு செய்தல்.

* ஓதுவார்களை கொண்டு சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய ஏழாம் திருமறை (மழை வேண்டும் பதிகம்) ஓதுதல்.

* திருஞானசம்பந்தர் இயற்றிய 12-ம் திருமுறையில் தேவார மழைப்பதிகத்தை மேகரா குறிஞ்சி என்ற பண்ணில் பாடி வேண்டுதல்.

* நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், வீணை வாத்தியங்களுடன் அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி ஆனந்த பைரவி, ரூப கல்யாணி போன்ற ராகங்களை கொண்டு வாசித்து வழிபாடு செய்தல்.

* சிவன் கோவில்களில் சிவபெருமானுக்கு சீதள கும்பம் எனப்படும் தாராபாத்திர நீர் விழா செய்தல்.

* சிவ பெருமானுக்கு ருத்ராபிஷேகம் செய்தல்.

* மகா விஷ்ணுவுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தல்.

* மழை வேண்டி பதிகங்கள் ஓதுதல்.

* ஸ்ரீ மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்தல்.

* நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் திருப்புன்கூர் சிவன் கோவிலில் உள்ள மகா நந்திக்கு மகாபிஷேகம் செய்தல்.

* வருண சூக்த வேத மந்திர பாராயணம் செய்தல்.

* வருண காயத்ரி மந்திர பாராயணம் செய்தல்.

இந்த நிகழ்ச்சிகளை அந்த கோவில்களின் பழக்க வழக்கத்துக்கு உட்பட்டு சிறப்பாக நடத்திட அக்கறையுடன் செயல்பட வேண்டும். இந்த நிகழ்வு தொடர்பாக கற்றறிந்தவர்களை தேர்வு செய்து மழை வேண்டி யாகம் செய்ய உடனடி நடவடிக்கைகளை சார்நிலை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

அந்த நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், செயல் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பாக நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

இந்துசமய அறநிலையத்துறை என்பது அரசு சார் அமைப்பு அது பொதுமக்களின் வரி பணத்தில் இயங்குவது.அந்த துறையின் நடவடிக்கை இயற்கைக்கு மாறாக இயங்கினால் அரசே மதம் சார்ந்து இயற்கைக்கு எதிராக கோடைக்காலமே வேண்டாம் என்று இயங்குவதுபோல் ஆகிவிடும்.ஆணையரின் தனிப்பட்ட அபிலாசைகளை எல்லாம் இயற்கைக்கு மாறான நடவடிக்கையை எல்லாம் இந்துசமய அறநிலையத்துறை பெயரில் செயல்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இதை எதிர்த்து சமூக வலைத்தளத்திலும் எழுதிவருவது கவனிக்கத்தக்கது

    .


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top