8 பணியாளர்கள் வேலை நீக்கம்; மெட்ரோ ரயில் தொழிலாளர்கள் போராட்டம்

8 பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதால் சென்னையில் மெட்ரோ ரயில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சென்னை கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிறுவன தலைமை அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அலுவலகத்தில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பணியாற்றி வந்த 8 பணியாளர்கள், விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியதால் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் சக ஊழியர்கள் இதனை கண்டித்து நேற்று மதியம் முதல் மெட்ரோ ரெயில் நிர்வாக அலுவலகத்தில் பணியை புறக்கணித்து தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிரந்தர பணியாளர்களை நிறுத்திவிட்டு ஒப்பந்த முறையில் அனைத்து ஊழியர்களையும் நியமிக்கவே இவ்வாறு செயல்பட்டு வருகின்றனர் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் தெரிவித்தனர்.

இந்த செய்தி மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கும் படிப்படியாக பரவியதால், மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடமுடிவு செய்தனர். 

இதனையடுத்து மெட்ரோ ரயில் ஊழியர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து, 2-வது நாளாக நிரந்தர ஊழியர்கள் இன்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

குறைந்த அனுபவம் உள்ள தற்காலிக ஊழியர்கள் மூலம் மெட்ரோ ரயில் இயக்கப்படுவதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை  சென்ட்ரலிலிருந்து விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரயில்சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தொடர் குழப்பத்தில் 2-வது நாளாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ஊழியர்கள் போராட்டத்தால் அனுபவம் இல்லாதவர்களை கொண்டு ரயில் இயக்கப்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.8 மணி நேரம் வேலை என்பது மாற்றப்பட்டு தற்போது 14 மணி நேரம் வேலைசெய்யவேண்டியதிருக்கிறது. இதை கேள்வி கேட்டால் வேலையிலிருந்து நீக்கி விடுகிறார்கள்

இந்தநிலையில் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு தொழிற்சங்க பிரதிநிதிளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, நியாயம் கிடைத்தால் போராட்டம் வாபஸ் பெறப்படும். இல்லை என்றால் தொழிலாளர்களின் போராட்டம் தொடரும் என்று சி.ஐ.டி.யூ. தமிழ் மாநிலக்குழு தலைவர் அ.சவுந்தரராஜன் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top