சுப்ரீம் கோர்ட்டு மீது அவதூறு! நெருப்புடன் விளையாடுவதற்கு சமம் நீதிபதி எச்சரிக்கை

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் பாலியல் புகார் விவகாரம் தொடர்பான வக்கீலின் பிரமாண பத்திரம் பற்றி நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, சுப்ரீம் கோர்ட்டு கடுமையாக எச்சரித்து உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு மீது அவதூறு சுமத்தி நெருப்புடன் விளையாட வேண்டாம் என்றும் நீதிபதி எச்சரித்தார்

உத்சவ் சிங் பெயின்ஸ் என்ற சுப்ரீம் கோர்ட் வக்கீல் பிரமாண பத்திரம் ஒன்றை  சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து இருந்தார்

அதில், புகார் கூறிய பெண்ணின் தரப்பில் ஆஜராக இருந்த தான் அந்த பெண்ணை சந்திக்க விரும்பியபோது, அஜய் என்பவர் தன்னிடம் வந்து அந்த சந்திப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், பெண்ணுக்கு ஆதரவாக ஆஜராக ரூ.1½ கோடி லஞ்சம் தர முன்வந்ததாகவும், இதனால்தான் பாலியல் புகாரில் சதி இருப்பதாக தான் உணர்ந்ததாகவும் கூறி இருந்தார்.

இந்த பிரமாண பத்திரத்தை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ரோகின்டன் பாலி நாரிமன், தீபக் குப்தா ஆகியோர் விசாரித்தபோது, வக்கீல் உத்சவ் சிங் பெயின்ஸ் நேரில் ஆஜராகி ‘சீல்’ வைத்த உறை ஒன்றில் சில ஆவணங்களையும், கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் (சி.சி.டி.வி. பதிவு) தாக்கல் செய்தார். அப்போது, கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகள் சதியில் தொடர்புடைய ஒரு கார்ப்பரேட் நிறுவனம் குறித்த தடயம் என்றும் அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் சி.பி.ஐ. இயக்குனர், தேசிய உளவு முகமை இயக்குனர் மற்றும் டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகியோரை நீதிபதிகள் தங்களது அறைக்கு வரவழைத்து விசாரித்தனர். அப்போது, உத்சவ் சிங் பெயின்ஸ் தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள பதவி நீக்கம் செய்யப்பட்ட சுப்ரீம் கோர்ட்டு ஊழியர்கள் பற்றி மற்றொரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த புகார் விவகாரத்தில் பெரிய அளவில் சதி இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து

வழக்கை 25-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதன்படி நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் வக்கீல் உத்சவ் சிங் பெயின்ஸ், ‘சீல்’ வைக்கப்பட்ட உறையில் மற்றொரு புதிய பிரமாண பத்திரத்தை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

அப்போது அவர், வக்கீல்கள் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டத்தில் வரையறுத்துள்ள உரிமையின் கீழ் தனக்கு உள்ள உரிமையின் அடிப்படையில் இந்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்ட நபர்களின் பெயர்களை கோர்ட்டுக்கு தெரிவிக்க முடியாது என்று கூறினார்.

உடனடியாக இதற்கு மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் எதிர்ப்பு தெரிவித்தார்.

அவர் வாதாடுகையில், “வக்கீல் உத்சவ் சிங் பெயின்ஸ் மற்றும் அவர் குறிப்பிட்டுள்ள சதித்திட்டம் தீட்டியவர்கள் இடையே நடைபெற்ற உரையாடல்கள் மற்றும் பரிமாற்றங்கள் தொடர்பாக இந்திய சாட்சிய சட்டத்தின் கீழ் அவர் உரிமை ஏதும் கோரமுடியாது. அவருடைய பிரமாண பத்திரத்தின்படி தலைமை நீதிபதிக்கு எதிரான வழக்கை எடுத்துக்கொள்வதற்கு யாரோ ரூ.50 லட்சம் எடுத்துக்கொண்டு வந்ததாக கூறப்பட்டது. அந்த குறிப்பிட்ட நபர் அல்லது நபர்கள் இவருடைய கட்சிக்காரர்கள் அல்ல. எனவே அவர் கூறும் சட்டப்பிரிவு இதில் அடங்காது என்பதால், அந்த உரிமையை அவர் கோர முடியாது. எனவே கோர்ட்டுக்கு அந்த பெயர்களை அவர் தெரிவிக்க வேண்டும்” என்று கூறினார்.விடாப்பிடியாக மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் அந்த நபர்கள் யார் என அறிவதில் முயற்சி செய்தார்

அப்போது சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்க தலைவர் ராகேஷ் கன்னா குறுக்கிட்டு, “அப்படி ஏதேனும் உரிமை அவருக்கு இருந்தாலும் அதனை மீறி வழக்கு தொடர்பான முக்கியமான ஆவணங்களை கோரும் அளவற்ற அதிகாரம் கோர்ட்டுக்கு உள்ளது” என்று கூறினார். அத்துடன், இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே வழங்கிய தீர்ப்பின் விவரங்களையும் தாக்கல் செய்தார்.

அவரை தொடர்ந்து வாதிட்ட மூத்த வக்கீல் இந்திரா ஜெய்சிங், இந்த அமர்வில் நடைபெறும் விசாரணை பெண் ஊழியர் செய்த புகாரை விசாரிக்கும் மூவர் குழுவினர் மேற்கொள்ளும் விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமையும் ஆபத்து இருப்பதாக தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், தற்போது இந்த அமர்வில் நடைபெற்று வரும் விசாரணை சதி திட்டம் பற்றியது என்றும், இது பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான சிறப்பு குழுவின் விசாரணையை எந்த வகையிலும் பாதிக்காது என்றும் கூறினார்கள்.

தொடர்ந்து வாதாடிய இந்திரா ஜெய்சிங், தற்போது பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள உத்சவ் சிங் பெயின்ஸ் பின்னணி சந்தேகத்துக்கு உரியதாக உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் ஸ்டிக்கர் எதுவும் இல்லாமல் அவர் வந்த ஜாகுவார் கார் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்துக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் நிர்வாகத்தில் உள்ள யாரோ சிலரின் பரிந்துரையின் பேரிலேயே இவ்வாறு அனுமதிக்கப்பட்டு இருக்கிறது” என்று கூறினார்.

அதற்கு நீதிபதி அருண் மிஸ்ரா, “கோர்ட்டு மீது பல்வேறு அவதூறுகள் சுமத்தப்படுகின்றன. இது இப்படியே தொடர முடியாது. எங்களை யாரும் தூண்டவேண்டாம் என்று எச்சரிக்கிறோம். சுப்ரீம் கோர்ட்டுடன் விளையாடுவது நெருப்புடன் விளையாடுவதற்கு சமம் என்று பணம் படைத்தவர்களுக்கும் அதிகாரம் படைத்தவர்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறோம். பெரும் பணமும், அரசியல் செல்வாக்கும் படைத்தவர்களாக கூறப்படும் நபர்கள் சுப்ரீம் கோர்ட்டின் விசாரணையில் குறுக்கிட முடியாது. நீதித்துறையை எந்த வகையிலும் வளைக்க முடியாது என்ற செய்தியை அவர்களுக்கு நாங்கள் அனுப்ப விரும்புகிறோம்” என்று கூறி பிற்பகலில் உத்தரவு பிறப்பிப்பதாக கூறினார்.

அதன்படி நேற்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கோர்ட்டு கூடியதும் நீதிபதிகள் உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர்.அந்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வக்கீல் உத்சவ் சிங் பெயின்ஸ் தாக்கல் செய்த புதிய பிரமாண பத்திரம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அது ‘சீல்’ வைத்த உறையில் வைக்கப்படும்.

வக்கீல் உத்சவ் சிங் பெயின்ஸ் தன்னுடைய வாதத்தில் கூறியது போல பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ள நபர்களின் பெயர்களை அவர் கூறாமல் இருப்பதற்கு அவருக்கு உரிமை உள்ளதாக கூறுவது ஏற்புடையது அல்ல. அந்த பெயர்கள் கோர்ட்டுக்கு தேவைப்படும்போது அதை அவர் கண்டிப்பாக வெளிப்படுத்த வேண்டும்.

இது தொடர்பாக அட்டார்னி ஜெனரல் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் முன்வைத்த வாதங்களும், இது தொடர்பாக அவர்கள் மேற்கோள் காட்டிய தீர்ப்புகளும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

இந்த விவகாரத்தில் உத்சவ் சிங் பெயின்ஸ் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரங்களின் அடிப்படையில் அந்த பிரமாண பத்திரங்களில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.கே.பட்நாயக் நியமிக்கப்படுகிறார்.

இந்த விசாரணை தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டு தொடர்பானதாக இருக்காது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். வக்கீல் உத்சவ் சிங் பெயின்ஸ் தன்னுடைய பிரமாண பத்திரத்தில், இந்த விவகாரத்தில் சதி நடைபெறுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை பற்றி மட்டுமே அந்த விசாரணை அமையும்.

இந்த விசாரணை பாலியல் புகார் தொடர்பாக ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவின் விசாரணையை எந்த வகையிலும் பாதிக்காது.

நீதிபதி ஏ.கே.பட்நாயக்குக்கு தேவைப்படும் பட்சத்தில், விசாரணை தொடர்பாக சி.பி.ஐ. இயக்குனர், உளவுத்துறை இயக்குனர் மற்றும் டெல்லி போலீஸ் கமிஷனர் ஆகியோர் அனைத்து வகையிலும் அவருக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட பிரமாண பத்திரங்களில் உள்ள குற்றச்சாட்டுகளை தீர விசாரித்து ஒரு அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதி ஏ.கே.பாதக்கை இந்த கோர்ட்டு கேட்டுக்கொள்கிறது. உத்சவ் சிங் பெயின்ஸ் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்கள் மற்றும் இதர ஆவணங்களை நீதிபதி ஏ.கே.பட்நாயக்குக்கு உடனடியாக கோர்ட்டு பதிவாளர் அனுப்பி வைக்க வேண்டும்.

நீதிபதி ஏ.கே.பட்நாயக் விசாரணையை முடித்து அது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்த பிறகு, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். என உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top