தேர்தல்ஆணையரிடம் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய பெட்டி குறித்து காங்கிரஸ் புகார்

பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் சித்தரதுர்காவில் பிரச்சாரம் செய்யவந்தபோது, அவரின் ஹெரிகாப்டரில் சந்தேகத்துக்குரிய வகையில் கறுப்பு நிற பெட்டி இருந்தது குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கக் கோரி, காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று மனு அளிக்கப்பட்டது.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி தலைமையிலான காங்கிரஸ் குழுவினர், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை நேரில் சந்தித்து புகார் மனுவை அளித்தனர்.

இந்த புகாரில் மோடியின் ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்கு உரிய வகையில் இருந்த கறுப்புப்பெட்டி குறித்தும், இமாச்சலப்பிரதேசத்தில் பாஜக தலைவர் அமித் ஷா, மாநில பாஜக தலைவர் சத்பால் சிங் சதி ஆகியோர் ராகுல் காந்தி குறித்து  சர்ச்சைக்குரிய வகையில் பேசியது ஆகியவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள்.

தேர்தல் தலைமை ஆணையருடனான சந்திப்புக்குப் பின், காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி நிருபர்களிடம் கூறியதாவது:

தலைமைத் தேர்தல் ஆணையரிடம் நாங்கள் 5 முக்கியக் கோரிக்கைகளை எழுப்பினோம். அவர் உறுதியாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார். நாங்கள் ஏற்கெனவே சில கோரிக்கை வைத்திருந்தோம், அதில் தேர்தல் ஆணையம் நடவடிக்கையை தொடங்கி இருக்கிறது, இப்போது வலியறுத்திய விஷயங்களிலும் நடவடிக்கை இருக்கும் என நம்புகிறோம்.

பிரதமர் மோடி உயர்ந்த பதவியில் இருந்து கொண்டு, அவர் பயணம் செய்த ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்குரிய வகையில் கறுப்புப் பெட்டியை அதிகாரிகள் இறக்கிக்கொண்டு செல்வது விசாரணைக்கு உட்பட்டது. இந்த விஷயத்தில் இதுவரை தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து திருப்தியான பதில் இல்லை. பிரதமர் மோடிக்கு பின்னால் ஒளிந்துகொண்டு ஆளும் கட்சி தேர்தல் நேரத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது வியப்பாக இருக்கிறது.

கடந்த 12-ம் தேதி பாஜக தலைவர் அமித் ஷா நான்டேட் நகரிலும், லட்டூர் நகரில் பிரதமர் மோடியும் மக்களிடம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியுள்ளனர். அதன் மீதும் நடவடிக்கை எடுக்க கேட்டுள்ளோம்.  தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் பிரதமர் மோடி மீதும், அமித் ஷா மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை

இமாச்சலப்பிரதேச மாநில பாஜக தலைவர் சதி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து அறுவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார். இதுபோன்ற பேச்சுக்கு மன்னிப்பு கோருவதற்கு பதிலாக, பிரதமர் மோடியை எதிர்த்ததால், ராகுல் காந்தியை அவ்வாறு பேசினேன். மன்னிப்பு கோரமுடியாது என்று பாஜக தலைவர் பேசியுள்ளார். இது பாஜகவின் உண்மையான தோற்றத்தை காட்டுகிறது, வெட்கப்பட வேண்டியது. இதுபோன்ற மனிதர்களை பிரச்சாரம் செய்வதில் இருந்து உடனடியாக தடை செய்ய வேண்டும்.  இவ்வாறு அபிஷேக் மனு சிங்வி தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top