சாதி, மத அடிப்படையில் பிரச்சாரம்; தேர்தல் ஆணைய நடவடிக்கை என்ன? உச்ச நீதிமன்றம் ஆய்வு

சாதி, மத அடிப்படையில் பிரச்சாரம் மேற்கொள்ளும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் அதிகார எல்லை குறித்து உச்ச நீதிமன்றம் இன்று ஆராய உள்ளது.

அரசியல் கட்சிகள் சாதி, மத அடிப்படையில் பிரச்சாரம் செய்வதற்கு எதிராக ஹர்பிரீத் மன்சுகனி என்ற வெளிநாடு இந்தியர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், “ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறைகளை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். அரசியல் கட்சிகளில் தேர்தலில் போட்டியிடாதவர்கள் டி.வி. மற்றும் சமூக வலைதளங்களில் ஜாதி, மத அடிப்படையில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுகின்றனர். இதை அனுமதித்தால் ஜனநாயகத்தின் மதச்சார்பற்ற தன்மை பாதிக்கப்படும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், “மதவாத மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுகளை தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு போதிய அதிகாரம் இல்லை. இது தொடர்பான புகார்களுக்கு விளக்கம் அளிக்குமாறு நாங்கள் நோட்டீஸ் அனுப்பலாம். ஆனால் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவோ, வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவோ முடியாது. இந்த விவகாரத்தில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதிக்கு ஏப்ரல் 12-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பினோம். ஆனால் அவர் பதில் அளிக்க வில்லை. எனவே நாங்கள் அறிவுரை மட்டுமே வழங்க முடியும். ஒருவேளை அதே குற்றத்தை அவர் மீண்டும் செய்தால் நாங்கள் வழக்குப் பதிவு செய்ய முடியும்” என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, “அரசியல் சட்டத்தின் 324-வது பிரிவின் படி தேர்தல் ஆணையத்துக்கு விரிவான அதிகாரங்கள் உள்ளன” என்றார்.

இதையடுத்து, “இந்த அதிகாரங்கள் குறித்து செவ்வாய்க்கிழமை (இன்று) ஆய்வு செய்யப்படும். அப்போது நீதிமன்றத்துக்கு உதவிட, தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ஆஜராக வேண்டும்” என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உத்தரவிட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top