மக்களவைத் தேர்தலில் விவிபாட் சீட்டுகளுடன் ஓட்டை சரிபார்க்க உச்ச நீதிமன்றத்தை அணுக எதிர்க்கட்சிகள் முடிவு

 

மக்களவைத் தேர்தலின்போது ஒவ்வொரு பேரவைத் தொகுதியிலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பதிவாகும் 50 சதவீத வாக்குகளை விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தை காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் மீண்டும் நாடவுள்ளன.

சமீபத்தில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அனைத்து தொகுதிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் (இவிஎம்) யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் ஒப்புகைச் சீட்டு வழங்கும் கருவி (விவிபாட்) பொருத்தப்பட்டது.

இந்நிலையில், தெலுங்கு தேசம், காங்கிரஸ், திமுக உட்பட 21 அரசியல் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ‘தற்போது ஒரு பேரவைத் தொகுதியிலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகள், விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்கப்படுகிறது. வரும் மக்களவைத் தேர்தலின்போது ஒவ்வொரு பேரவைத் தொகுதியிலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பதிவாகும் 50 சதவீத வாக்குகளை விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கையின்போது, சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதில் ஒவ்வொரு தொகுதியிலும் 5 வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகளை விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு அண்மையில் உத்தரவிட்டது.

இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலின்போது ஒவ்வொரு பேரவைத் தொகுதியிலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பதிவாகும் 50 சதவீத வாக்குகளை விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்று கோரி மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுக எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அபிஷேக் சிங்வி, கபில் சிபல், ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அபிஷேக் சிங்வி கூறும்போது, “இதுதொடர்பாக தேசிய அளவிலான பிரச்சாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஈடுபடவுள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிவர செயல்படாதது தொடர்பான பிரச்சினைகளை தேர்தல் ஆணையம் சரியாக அணுகவில்லை. ஆந்திராவில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படவில்லை” என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top