ஐஎஸ்ஐ முத்திரை இல்லா தரமற்ற தண்ணீர் கேன் விற்பனை நிறுவனங்களுக்கு சீல் வைக்க உத்தரவு

ஐஎஸ்ஐ முத்திரை, எஃப்எஸ்எஸ்ஐ உரிமம் இல்லாமல் தரமற்ற தண்ணீர் கேன்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு சீல் வைக்க உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

இது கோடை காலம் தண்ணீரின் தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சமைப்பதற்கும் குடிப்பதற்கும் தண்ணீர் கேன்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் சென்னையில் மட்டும் ஒரு நாளுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் கேன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வாறு, தண்ணீர் கேன்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் சில நிறுவனங்கள், உரிய அனுமதி பெறாமல் தரமற்ற முறையில் தண்ணீர் கேன்களை விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது.

இதனால் நுகர்வோருக்கு உடல்நலன் பாதிக்கப்படுகிறது. எனவே, இதுபோன்ற சுகாதாரமற்ற போலி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புத் துறை முடிவு செய்துள்ளது. இதன்படி, தண்ணீர் கேன்களில் விற்பனை செய்யும் நிறுவனத்தின் பெயர், முகவரி, தயாரிக்கப்பட்ட தேதி, ஐஎஸ்ஐ முத்திரை, உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் உரிமம் எண் உள்ளிட்டவை கண்டிப்பாக அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு அச்சடிக்காமல், தரமில்லாத தண்ணீர் கேன்களைத் தயாரிக்கும் நிறுவனங்களைக் கண்டறிந்து, அந்நிறுவனங்களுக்கு சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு, உணவுபாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வெயில் காலம் என்பதால் தண்ணீர் கேன்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இதைப் பயன்படுத்தி லாபநோக்கில், உரிமம் இன்றி தண்ணீர் கேன்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வரத் தொடங்கியுள்ளன.

நிறுவனத்தின் பெயர், முகவரி, தயாரிக்கப்பட்ட தேதி, ஐஎஸ்ஐ முத்திரை, எஃப்எஸ்எஸ்ஐ உரிமம் எண் இல்லாமல் தண்ணீர் கேன்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தால் 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் அளிக்கலாம். இதுமட்டுமின்றி, தண்ணீர் கேன்களை சில கடைகளில் வெயிலில் வைத்திருப்பார்கள். அதுபோன்று வைக்கப்பட்ட தண்ணீரைப் பருகுவதும் உடல் நலத்துக்கு கேடுதான். இதுகுறித்தும் புகார் தெரிவிக்கலாம். போலி நிறுவனங்களைக் கண்டறிய ஆய்வுகளைத் தீவிரப்படுத்தி, ஐஎஸ்ஐ முத்திரை, உரிமம் இல்லாமல் விதிகளை மீறி செயல்படும் நிறுவனங்களுக்கு சீல் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top