புதுவையில் முத்தரசன் பிரசாரம்; மோடி ஆட்சியை வெளியேற்றுவது மக்களின் கடமை

புதுவை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்தி லிங்கத்தை ஆதரித்து முத்தரசன் தேர்தல் பிரசாரம் செய்தார்.

புதுவை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்தி லிங்கத்தை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் இன்று புதுவையில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

லாஸ்பேட்டை உழவர் சந்தை அருகில் இருந்து அவர் பிரச்சாரத்தை தொடங்கினார்.

நாடு இதுவரை 16 தேர்தலை சந்தித்துள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது ஒரு பிரச்சினையை முன்வைத்து பிரசாரம் செய்துள்ளோம். ஆனால் இத்தேர்தல் வித்தியாசமானது. இந்த நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று கோ‌ஷத்தை முன்வைத்து பிரசாரம் செய்கிறோம். நாட்டை பிளவுபடுத்தும், பிரிவுபடுத்தும், சீரழிக்கும் கட்சி ஆட்சியில் உள்ளது.

குரங்கு கையில் கிடைத்த பூ மாலையாக பா.ஜனதா ஆட்சியில் நம் நாடு சிக்கி தவிக்கிறது. தேசத்தை காப்பாற்ற வேண்டும், அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்ட தேர்தல் துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த தேர்தல் அமைந்துள்ளது.

மத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக பேசினால் அவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். கருத்துரிமை பறிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமான புதுவையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் அரசு உள்ளது.

ஆனால் மோடியால் அனுப்பப்பட்ட கவர்னர் கிரண்பேடி காங்கிரஸ் அரசுக்கு கடும் தொல்லைகளை அளித்து வருகிறார். அவர் டெல்லி மக்களால் நிராகரிக்கப்பட்டவர். அவர் காங்கிரஸ் ஆட்சிக்கு குடைச்சல், தொல்லை அளித்து வருகிறார். திட்டங்களை செயல்படுத்த விடாமல் அவர் தடுத்து வருகிறார்.

மோடி ஆட்சி மோசடி ஆட்சி. ரபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திலேயே தவறான தகவல்களை அளித்தவர்கள். எனவே இந்த ஆட்சியை வெளியேற்ற வேண்டியது மக்களின் கடமையாக உள்ளது. புதுவை பாராளுமன்ற தொகுதியில் பல்வேறு அரசு பதவிகளை அலங்கரித்த தியாகி வெங்கடசுப்பாரெட்டியார் மகன் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அவருக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச்செய்ய வேண்டும். இந்த வெற்றியின் மூலம் மத்தியில் ஆளும் மோடி அரசை அகற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் பிரமுகர் ராமலிங்கம் மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top