உயர் நீதிமன்ற உத்தரவு எதிரொலி; அங்கீகாரமற்ற பள்ளிகள் மீது நடவடிக்கை! அதிகாரிகளுக்கு அரசு எச்சரிக்கை

அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க தவறினால், அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் சமச்சீர் மற்றும் இதர பாடத்திட்டங்களின்கீழ் இயங்கும் அரசு உதவி பெறும், பகுதி நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐஜிசிஎஸ்இ போன்ற மத்திய வாரியங்களில் இணைப்பு பெற்ற பள்ளிகள் எல்லாம் கட்டாயம் மாநில அரசின் அங்கீகாரம் பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக செய்யப்பட்ட ஆய்வு நடவடிக்கையின்போது தனியார் பள்ளிகள் பல உரிய அங்கீகாரமின்றி செயல்படுவது தெரியவந்துள்ளது. அத்தகைய பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாததுடன், அவர்களால் அரசின் பொதுத்தேர்வுகளையும் எழுத முடியாது. மேலும், அந்தப் பள்ளிகளால் வழங்கப்படும் சான்றிதழ்கள் தகுதியற்றவைகளாகும்.

இவ்வாறு அங்கீகாரமின்றி பள்ளிகள் இயங்கி வருவது அந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பணியை சரிவர செய்யவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது. எனவே, முதன்மை கல்வி அதிகாரிகள் அனைவரும் மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் வட்டார கல்வி அதிகாரிகளின் உதவியுடன் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் நேரில் சென்று பள்ளிகளின் அங்கீகார விவரங்களை ஏப்ரல் 23-ம் தேதிக்குள் பெற வேண்டும். ஆய்வு முடிவில் அங்கீகாரமின்றி இயங்கும் பள்ளிகள் பட்டியலை தயார் செய்து அந்தந்த பகுதிகளில் நாளிதழ்கள் வாயிலாக பொதுமக்கள் அறியும் வகையில் செய்தி வெளியிட வேண்டும். மேலும், அங்கீகாரமின்றி செயல்படும் தகவல், பள்ளி முகப்பில் பெற்றோர் அறியும் வண்ணம் ஒட்டப்பட வேண்டும்.

மேலும், அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் விவரங்களை பெற வேண்டும். அதன்பின் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தகவல் தெரிவித்து ஆலோசனை பெற்று செயல்பட வேண்டும்.

வரும் கல்வி ஆண்டு தொடங்கும் போது அவரவர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் அங்கீகாரம் பெற்றவை என்பதை முதன்மை கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பான வழிகாட்டுதல்களை பின்பற்றி அங்கீகாரமற்ற பள்ளிகள் மீதான நடவடிக்கை விவரங்களை அறிக்கையாக ஏப்ரல் 29-ம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதேநேரம் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறி, அதனால் அந்த பள்ளியில் பயிலும் குழந்தைகள் பாதுகாப்புக்கோ, கல்வி நலனுக்கோ குந்தகம் ஏற்பட்டால் அதுசார்ந்த முழுப் பொறுப்பும் சம்பந்தபட்ட பகுதிகளின் கல்வித்துறை அதிகாரிகளே ஏற்க நேரிடும்.

மேலும், இதற்கு பொறுப்பாகும் அதிகாரிகள் மீது உரிய ஒழுங்குநடவடிக்கையும் மேற்கொள்ளப் படும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top